‘அதெல்லாம் இப்ப வேணாம்’... ‘2022 ஐபிஎல் போட்டியில் பாத்துக்கலாம்’... ‘பிசிசிஐ எடுத்த உறுதியான முடிவு’... ‘வெளியான தகவல்’!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவரும் 2021-ஆம் ஆண்டில் புதிய அணிகளை இப்போது அவசரகதியில் சேர்க்க வேண்டாம் என பிசிசிஐ திட்டமிட்டுள்ளதுடன், அதற்கான குறித்தும் தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் 13-வது சீசன் கொரோனா வைரஸ் காரணமாக, ரசிகர்கள் இன்றி ஐக்கிய அமீரகத்தில் நடந்து முடிந்துள்ளது. இதில் 8 அணிகள் பங்கேற்று விறுவிறுப்பாக போட்டிகள் நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோதிய மும்பை இந்தியன்ஸ் அணி, வெற்றி பெற்று தனது 5-வது கோப்பையை கைப்பற்றியது.
இதற்கிடையில் கொரோனா தடுப்பூசிகள் வர உள்ளதால், வழக்கம் போல 2021 ஆண்டின் மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஐபிஎல் தொடர், இந்தியாவிலேயே நடத்த திட்டமிட்டு வருவதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது. நிதி நிலைமையை சமாளிக்க வரும் தொடரில் மேலும் இரண்டு அணிகளை இணைக்க பிசிசிஐ திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
ஆனால் தற்போது இந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் துவங்க இன்னும் ஏறக்குறைய மூன்றரை மாதங்களே உள்ள நிலையில், அவசரகதியில் புதிய அணிகளை தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இதில் அணிகளை சேர்ப்பது, வீரர்கள் தேர்வு, என பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக கருதப்படுகிறது.
இதையடுத்து வரும் 2022-ல் புதிய அணிகளை ஐபிஎல்லில் இணைக்கும் முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது. இதனால் ஏற்கனவே உள்ள 8 அணிகளே ஐபிஎல் 14-வது சீசனில் பங்கேற்று விளையாடும் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும் இதுகுறித்த இறுதி முடிவு வரும் 24-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ள பிசிசிஐயின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்தப் பொதுக்கூட்டத்தில் ஐபிஎல் அணிகள் சேர்ப்பு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக முன்னதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் புதிதாக ஏலத்தை நடத்த வேண்டியதில்லை என்றும் அதிகமான நேரம் சேமிக்கப்படும் என்றும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.