'மோசமான' உலக சாதனை படைத்த இளம்வீரர்... அவ்ளோதானா 'இன்னும்' இருக்கா?... கடுப்பான நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Feb 02, 2020 08:59 PM

இந்தியா-நியூசிலாந்து இடையிலான 5-வது டி20 போட்டி மவுண்ட் மவுங்கானில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது.

IND Vs NZ: Shivam Dube brutally trolled on Twitter

தொடர்ந்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 17 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் 4-வது விக்கெட்டுக்கு ராஸ் டெய்லர்-ஷெப்பர்ட்  இருவரும் பொறுப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் சாஹல், சைனி, பும்ரா, ஷர்துல் ஆகியோர் கூட்டணி அமைத்து நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து வெளியேற்றினர். எனினும் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 156 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனையடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று, டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் வென்றது.

4 ஓவரில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா ஆட்ட நாயகன் விருதையும், தொடர் முழுவதும் விக்கெட் கீப்பிங், ஓபனிங் பேட்ஸ்மேன், கேப்டன் என பல்வேறு அவதாரங்களை எடுத்த கே.எல்.ராகுல் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.

இன்றைய ஆட்டத்தில் சாஹல், பும்ரா, ஷர்துல், சைனி சிறப்பாக பந்து வீசினாலும் மற்றொரு பவுலரும், இளம்வீரருமான சிவம் துபே 10-வது ஓவரை வீசி 34 ரன்கள் விட்டுக்கொடுத்து, மிகவும் மோசமான சாதனையை செய்தார். 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 1 நோ பால், 1 சிங்கிள் என மொத்தம் 34 ரன்களை வாரி வழங்கினார்.

இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த இந்திய பவுலர், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த 2-வது பவுலர் என்ற மோசமான சாதனை சிவம் துபேவுக்கு கிடைத்துள்ளது. இதற்கு முன் 2007-ல் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான டி20 போட்டியில் ஸ்டூவர்ட் பிராட்டின்(36) ஒரே ஓவரில் யுவராஜ் சிங் 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இன்றைய ஆட்டத்துக்குப்பின் பெங்களூர் அணிக்கு முக்கியமான பவுலராக சிவம் துபே  மாறிவிட்டார் என, நெட்டிசன்கள் கண்டபடி சமூக வலைதளங்களில் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.