'ஆடுன' வரைக்கும் போதும்... முன்னணி வீரரை 'கழட்டிவிடத்' தயாரான கேப்டன்... கசிந்த ரகசியம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Feb 27, 2020 01:13 PM

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இது இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. காரணம் இந்திய அணி டெஸ்ட் அரங்கில் நம்பர் 1 அணியாக திகழுவதால் ரசிகர்களால் இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

IND Vs NZ: R Ashwin or Jadeja, Who will Kohli pick for 2nd Test?

இதனால் வருகின்ற 29-ம் தேதி கிறிஸ்ட் சர்ச்சில் நடைபெறவுள்ள 2-வது டெஸ்ட் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதில் வென்று தொடரை சமன் செய்தால் தான் இந்திய அணியின் கவுரவம் ஓரளவாவது காப்பாற்றப்படும். இல்லையெனில் டெஸ்ட் தொடரின் நம்பர் 1 அணியாக விளங்கி வரும் இந்திய அணிக்கு இது மிகப்பெரும் பின்னடைவாக அமையக்கூடும்.

இந்த நிலையில் 2-வது டெஸ்டில் வென்றேயாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி திகழ்வதால் அணியில் சில அதிரடி மாற்றங்களை அவர் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் அஸ்வினை கழட்டி விடவும் கோலி தயாராகி விட்டாராம். முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாலும் பேட்டிங்கில் பெரிதாக கைகொடுக்கவில்லை. முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன அவர், 2-வது இன்னிங்ஸில் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இதனால் அதிருப்தி அடைந்த கோலி, ஆல்ரவுண்டர் ஜடேஜாவை அணியில் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் 31 டெஸ்ட் இன்னிங்க்ஸ்களில் 996 ரன்கள் குவித்துள்ளார் ஜடேஜா. சராசரி 49.80 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 63.19 ஆகவும் உள்ளது. இதில் ஒரு சதம் மற்றும் 10 அரைசதங்களும் அடங்கும். மறுபுறம் அஸ்வின் 36 இன்னிங்க்ஸ்களில் விளையாடி 573 ரன்களே எடுத்துள்ளார். சராசரி 17.36 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 53.20 ஆகவும் உள்ளது. இதில்  ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அஸ்வின் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்கெட் வீழ்த்துவதில் அஸ்வின் முன்னணி வீரராக இருந்தாலும், சிக்கனமாக பந்துவீசி ஜடேஜா அசத்துவதாலும் பேட்டிங்கில் கைகொடுப்பார் என்பதாலும் ஜடேஜாவுக்கு 2-வது போட்டியில் கண்டிப்பாக இடம் கிடைக்கும் என கூறப்படுகிறது. அவ்வாறு ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டால் அஸ்வின் தன்னுடைய இடத்தை அணியில் இழக்க நேரிடும். இல்லையெனில் வேறு யாராவது ஒரு இளம்வீரரை வெளியில் அமரவைத்து ஜடேஜாவை, கோலி உள்ளே கொண்டு வரவும் வாய்ப்புகள் இருக்கிறது என்பதால் யாருக்கு அணியில் இடம் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.