"எனக்கு 'டெஸ்ட்' மேட்சே புடிக்காது.. ஆனா, இவரு 'பேட்டிங்' பண்ண வந்தா மட்டும்.. அத ரொம்ப 'ENJOY' பண்ணி பாப்பேன்.." 'இந்திய' வீரருக்கு கிடைத்த வேற லெவல் 'பாராட்டு'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, வரும் ஜூன் மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரையில், இரு அணிகளும் சம பலத்துடன் விளங்குவதால், எந்த அணி முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றும் என்பதில், ரசிகர்கள் மத்தியில் தற்போதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், இந்த போட்டியைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி ஆடவுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி, சமீப காலமாக வெளிநாட்டு மைதானங்களில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்றிருந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை, அதிக அனுபவமில்லாத இளம் வீரர்களுடன் ஆடிய இந்திய அணி, தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்திருந்தது.
அதிலும், இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் (Rishabh Pant), ஆஸ்திரேலிய தொடரிலும், அதன் பிறகு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும், தனது சிறந்த ஆட்டத்தால், இந்திய அணியின் அசைக்க முடியாத வீரராக, குறுகிய காலத்திலேயே உருவெடுத்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரும் நெருங்கி வருவதால், அதிலும் ரிஷப் பண்ட் பட்டையைக் கிளப்புவார் என ரசிகர்கள் பெரியளவில் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான டைமல் மில்ஸ் (Tymal Mills), ரிஷப் பண்ட் ஆட்டம் பற்றி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 'நான் குறைந்த ஓவர் போட்டிகளில் மட்டும் தான் ஆடியுள்ளேன். பொதுவாக, பாரம்பரியமான டெஸ்ட் போட்டிகளை பார்ப்பது என்பது எனக்கு பிடிக்காது. ஆனால், ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்ய வந்தால் மட்டும், நான் அதனை அதிகம் விரும்பி பார்க்கிறேன். அவரது பேட்டிங் பார்ப்பதற்கே உற்சாகமாக உள்ளது.
அது மட்டுமில்லாமல், டிவி பார்ப்பதன் மீதான விருப்பமும் அதிகரிக்கிறது. கண்களைக் கவரும் வகையிலான, இரண்டு சிறப்பான டெஸ்ட் இன்னிங்ஸ்களை பண்ட் ஆடியுள்ளார். அது பார்ப்பதற்கே நன்றாக இருக்கும். நான் பொழுது போக்கு கிரிக்கெட்டைப் பார்க்க விரும்புகிறேன்' என டைமல் மில்ஸ் தெரிவித்துள்ளார்.