"'கங்குலி', 'தோனி'கிட்ட இருந்த அதே 'பவர்'.. இந்த 'பையன்'கிட்டயும் பாத்தேன்.. சீக்கிரமாவே 'கேப்டன்' ஆயிடுவாரு பாருங்க.." 'இளம்' வீரரை வேற லெவலில் பாராட்டிய 'முன்னாள்' வீரர்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மோதின.
இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணியில், டிவில்லியர்ஸ் (Devilliers) மிகவும் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். இறுதி வரை களத்தில் நின்ற அவர், 42 பந்துகளில் 75 ரன்கள் குவித்து அசத்தினார். இதனால், பெங்களூர் அணி, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியில், தொடக்க விக்கெட்டுகள் சில அடுத்தடுத்து சரிந்தன.
ஆனாலும், கடைசியில் ஹெட்மயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சிறப்பாக ஆடி, வெற்றிக்கு அருகே வந்தனர். ஆனால், டெல்லி அணியின் வெற்றிக்கு, இறுதி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட, 12 ரன்களை மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது. இதனால், பெங்களூர் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்தது.
இந்நிலையில், ரிஷப் பண்ட்டின் (Rishabh Pant) தலைமையை பாராட்டி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா (Pragyan Ojha), கருத்து தெரிவித்துள்ளார். 'இளம் வயதிலேயே பேட்டிங்கில் அதிக அனுபவத்தை ரிஷப் பண்ட் காட்டுவது போல, தற்போது டெல்லி அணியை வழிநடத்துவதை பார்ப்பதற்கும், அவர் ஒரு நல்ல கேப்டனாக இருப்பார் என நம்ப முடிகிறது.
ஒரு வீரரை பற்றி நாம் பேசும் போது, அவரைச் சுற்றியுள்ள சில விஷ்யங்கள், அவர் எப்படிப்பட்ட வீரர் என்பதை நமக்கு எடுத்துரைக்கும். அந்த வகையில், ரிஷப் பண்ட்டை பார்க்கும் போது, இந்திய அணியின் கேப்டனாக உருமாறுவார் என எனக்குத் தோன்றுகிறது. அதே போல, அவரை பற்றி படிக்கும் போதும், மற்றவர்களிடம் பேசும் போதும், என்னால் அதனைத் தான் உணர முடிகிறது.
முன்னதாக, கங்குலி மற்றும் தோனியை சுற்றி உருவான அதே உணர்வு தான், தற்போது ரிஷப் பண்ட்டிடம் தோன்றுகிறது. அவர் இந்திய அணியின் கேப்டனாக, இன்னும் சில காலம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இப்போதே அவர் தன்னை ஒரு சிறந்த வீரராகவும், அணியின் தலைவராகவும் உருவாக்கி கொண்டிருக்கிறார். ரவி சாஸ்திரியின் கீழ், நிச்சயம் இன்னும் அவர் மேம்படுவார்' என பண்ட்டை பாராட்டி, பிரக்யான் ஓஜா கருத்து தெரிவித்துள்ளார்.
பெங்களூர் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், ரிஷப் பண்ட் கேப்டன்சி பற்றி, சேவாக் உள்ளிட்ட சில கிரிக்கெட் பிரபலங்கள் விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.