‘ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அபார வெற்றி கொடுத்த பூஸ்டர்’.. இனி அந்த ‘ஒன்னு’ மட்டும் நடந்தா போதும்.. அப்புறம் இந்தியா ‘அரையிறுதி’-க்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்கு செல்ல இந்திய அணிக்கு சில வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பு கட்டத்தை அடைந்துள்ளது. இந்த தொடர் ஆரம்பிக்கும் முன், இந்திய அணி கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டது. ஆனால் முதல் இரண்டு போட்டிகளிலேயே இந்தியா மோசமான தோல்வியைச் சந்தித்தது. இதனால் நெட் ரன்ரேட்டும் வெகுவாக குறைந்தது. இதன்காரணமாக இந்திய அணி, அரையிறுதிக்கு செல்வது கேள்குறியாகியுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணியின் நெட் ரன்ரேட் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனை அடுத்து ஸ்காட்லாந்து மற்றும் நம்பீயா ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாட உள்ளது. இந்த இரு போட்டிகளிலும் இந்தியா அபார வெற்றி பெற்றால், அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட நிறைவேறிவிடும்.
ஆனாலும் இந்த அரையிறுதி ரேஸில் நியூஸிலாந்து அணியும், உள்ளதால் அந்த அணியின் வெற்றி, தோல்வியை பொறுத்தே இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் நியூஸிலாந்து அணி உள்ளது. அதனால் இனி விளையாட உள்ள 2 போட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டியில் நியூஸிலாந்து அணி தோல்வியடைய வேண்டும்.
அப்படி தோல்வியடையும் பட்சத்தில் இந்தியாவும், நியூஸிலாந்தும் 6 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். அப்போது அதிக நெட் ரன்ரேட் வைத்துள்ள அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும். அதனால் இந்தியா இனி விளையாட இருக்கும் 2 போட்டிகளில் நிச்சயம் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றே ஆகவேண்டும்.
ஆனால் நியூஸிலாந்து அணியும் அதேபோல் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுவிட்டால், இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பே இல்லை. அதனால் இனி வரும் போட்டிகளில் நியூஸிலாந்து அணியின் ஆட்டத்தை பொறுத்தே இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு உள்ளது. இந்த சூழலில் இன்று (05.11.2021) ஸ்காட்லாந்து அணியை எதிர்த்து இந்தியா விளையாட உள்ளது.