"13 வருசமா பேசிட்டே இருக்காங்க.. ஆனா, 'செயல்'ல ஒன்னும் இல்ல.." பிரபல 'ஐபிஎல்' அணியை விமர்சித்த 'கம்பீர்'.. 'பரபரப்பு' கருத்து!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு14 ஆவது ஐபிஎல் சீசன் நேற்று ஆரம்பமான நிலையில், இதன் முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய பெங்களூர் அணி, வெற்றியுடன் இந்த தொடரை ஆரம்பித்துள்ளது.
இதுவரை 13 சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், இதில் இரண்டு முறை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள பெங்களூர் அணி, ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. ஒவ்வொரு முறையும் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக திகழும் பெங்களூர் அணி, தங்களது முன்பிருக்கும் சிறந்த வாய்ப்பையும் தவற விட்டு வருகிறது.
அது மட்டுமில்லாமல், ஒவ்வொரு சீசனிலும் பெங்களூர் அணியின் ரசிகர்கள், அதிக எதிர்பார்ப்புடன் இருந்தும், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கும். இதனால், இந்த முறை நிச்சயம் பெங்களூர் அணி கோப்பையைக் கைப்பற்றும் என அதீத நம்பிக்கையுடன் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியின் செயல்பாடு குறித்து, இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் (Gautham Gambhir) விமர்சனம் செய்துள்ளார்.
'பெங்களூர் அணியில் ஒவ்வொரு சீசனின் போதும், பெரிய அளவில் ஃபயர் பவர் இருந்துள்ளது. கெவின் பீட்டர்சன், கிறிஸ் கெயில் தொடங்கி பல அதிரடி வீரர்கள், அந்த அணிக்காக ஆடியுள்ளனர். எங்களிடம் வலுவான அணி உள்ளதாக, அனைத்து சீசன்களிலும் பெங்களூர் அணி பெரிதாக பேசிக் காட்டும். ஆனால், பேச்சில் வலுவாக இருக்கும் பெங்களூர் அணி, அதனை செயலில் காட்டியதில்லை.
அது மட்டுமில்லாமல், இதுவரை ஐபிஎல் கோப்பையையும் அந்த அணி வென்றதில்லை. இந்த முறை, அதிரடி வீரர் மேக்ஸ்வெல் பெங்களூர் அணியில் இணைந்துள்ளார். டிவில்லியர்ஸ், கோலி ஆகியோருக்கு மேக்ஸ்வெல் கூடுதல் பலமாக இருப்பார். இந்த முறையாவது பெங்களூர் அணி இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என கம்பீர் கூறியுள்ளார்.