ஐ.பி.எல். போட்டி நடுவே நாடு திரும்பும் வீரர்கள்.. ரசிகர்கள் அதிர்ச்சி.. காரணம் என்ன?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Arunachalam | Apr 25, 2019 02:54 PM
தாயகம் திரும்பும் வீரர்களால், இனி வரும் ஐ.பி.எல். லீக் போட்டிகளில் சுவாரஸ்யம் இருக்குமா என்று ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

உள்ளூர் டி20 போட்டியான 12-வது ஐ.பி.எல். லீக் தொடர் மார்ச் மாதம் 23 -ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் என 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த 8 அணிகளிலும் பல வெளிநாட்டு வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டு, விளையாடி வருகிறார்கள். இந்த வீரர்கள் தான் பெரும்பாலும் அணியின் வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வதில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
இந்நிலையில் வருகிற மே மாதம் 30 ஆம் தேதி முதல் இங்கிலாந்தில் உலக கோப்பைக்கான போட்டிகள் துவங்கவுள்ளன. உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை, தத்தமது நாடுகள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் அளித்துள்ளது. மேலும், உலகக் கோப்பை போட்டிக்கான வலைப் பயிற்சி மேற்கொள்வதில், அனைத்து நாடுகளும் தீவிர முனைப்பில் ஈடுபட்டுள்ளன.
இதையடுத்து இந்தியாவில் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்றுள்ள, வெளிநாட்டு வீரர்கள் தங்களது தாயகம் திரும்ப தயாராகி வருகின்றனர். இதில் இங்கிலாந்து அணியின் வீரர்களை, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வருகிற ஏப்ரல் 26 -ம் தேதிக்கு முன்பும், ஆஸ்திரேலியா அணி வீரர்களை, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மே 2 -ம் தேதி முன்பும் நாடு திரும்ப அறிவுறுத்தியுள்ளது. எனினும், நியூஸிலாந்து அணி வீரர்களை, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல். முடிந்து திரும்பி வர பணித்துள்ளது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு கிரிக்கெட் வாரியத்தின் முடிவால், ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்றுள்ள பல வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்புகின்றனர். அதிலும் டேவிட் வார்னர், மார்ட்டின் கப்டில், இம்ரான் தாஹிர், மொயின் அலி, டுப்ளிஸிஸ், ஸ்மித், டிம் சவுதி, ரபாடா, டி காக் போன்றோர் நாடு திரும்ப உள்ளனர். இதனால் இனிவரும் ஐ.பி.எல். லீக் போட்டியில் பரபரப்பான போட்டிகள் இருக்குமா என்று ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்துள்ளனர்.
