"அவர் வந்த அப்பறம் தான் என் மகனோட வாழ்க்கையே மாறிடுச்சு".. தினேஷ் கார்த்திக் தந்தை உருக்கம்.. யார் இந்த அபிஷேக் நாயர்..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான தினேஷ் கார்த்திக் குறித்து அவரது தந்தை மனம் திறந்திருக்கிறார்.
தினேஷ் கார்த்திக் கடந்த 2004 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் ஆனார். சொல்லப்போனால் தோனிக்கு முன்பாகவே இந்திய அணியில் இடம்பிடித்தவர் தினேஷ் கார்த்திக். இடையில் பல்வேறு சரிவுகளை அவர் சந்தித்து வந்தார். கடந்த வருட ஆகஸ்டு மாதத்தில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது இந்தியா. அப்போது, வர்ணனையாளராக பணிபுரிந்தார் தினேஷ் கார்த்திக்.
ஆனால், தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் எத்தனை பெரிய தடைகளையும் தகர்க்கலாம் என்பதை உலகிற்கு மீண்டும் நிரூபித்தார் தினேஷ் கார்த்திக். அதற்கு அவருக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது கடந்த ஐபிஎல் சீசன். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக கடந்த ஆண்டு விளையாடிய அவர் 16 போட்டிகளில் 330 ரன்கள் குவித்தார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 183.33 ஆகும்.
இந்நிலையில் தினேஷ் கார்த்திக் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் T20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தற்போது விளையாடி வருகிறார். இக்கட்டான சூழ்நிலையில் அதிரடி காட்டும் தினேஷ் கார்த்திக்கின் இந்த அவதாரத்தை 'மிராக்கிள்' என்கிறார் அவருடைய தந்தை கிருஷ்ண குமார். மேலும், தனது மகனுடைய வாழ்க்கை அபிஷேக் நாயரின் வருகைக்கு பிறகு மாற்றம் கண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பேசிய அவர்,"அவர் (அபிஷேக் நாயர்) தினேஷ் கார்த்திக்கை இரவு 2 மணிக்கு எழுப்பி மலைகளின் மீது ஓட வைத்தார். கார்த்திக்கின் பயிற்சி ஆட்டங்களை அபிஷேக் வடிவமைப்பார். மேலும், அவர் ஒரு டென்னிஸ் வீரர் போல் பயணம் செய்தார். பவர்-ஹிட்டிங் பயிற்சியாளராக RX முரளி பணியமர்த்தப்பட்டார். அவருடன் பேசுவதற்கும் வேலை செய்வதற்கும் ஒரு குழு உள்ளது. சில முறை, அபிஷேக் நாயருடன் தனது உரையாடலை பதிவு செய்யும்படி தினேஷ் என்னிடம் சொல்வார். அவற்றை சாதாரண மனிதர்களுக்கு விளக்குவது கடினம்" என்றார்.
இந்தியாவிற்காக விளையாடியுள்ள அபிஷேக் நாயர், தினேஷ் கார்த்திக்கின் நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் புனே வாரியர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடிய அபிஷேக், பின்னர் கொல்கத்தா அணிக்காக பயிற்சியாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | காளான் பறிக்க போன பெண்கள்.. திடீர்ன்னு பாஞ்ச துப்பாக்கி குண்டு.. கொலையாளி சொன்ன குலை நடுங்கும் வாக்குமூலம்!!