‘விதியை மீறி சென்றதால்’... ‘நோட்டீஸ் அனுப்பிய பிசிசிஐ’... ‘தவறை ஒப்புக் கொண்ட இந்திய வீரர்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Sep 09, 2019 12:41 PM

உங்களது ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு, இந்திய வீரர் ஒருவருக்கு, பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியதற்கு அந்த வீரர், தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

Dinesh Karthik responds to BCCI notice on his appearance

தமிழகத்தைச் சேர்ந்த வீரரான தினேஷ் கார்த்திக், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். சமீபத்தில் நடைப்பெற்ற உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற இவர், அதன்பிறகு இந்திய அணி பங்கேற்ற, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் தேர்வாகவில்லை. இதனிடையே, மேற்கிந்திய தீவுகளில், கரீபியன் பிரீமியர் லீக் தொடர் நடைப்பெற்று வருகிறது. இதனைக் காணச் சென்ற தினேஷ் கார்த்திக், போட்டியின்போது டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் டிரெஸ்ஸிங் ரூமுக்குச் சென்றதுடன், அங்கு அந்த அணியின் ஆடையை அணிந்து பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் உடன் அமர்ந்திருந்தார்.

போட்டி லைவ் நடந்துகொண்டிருக்கும்போது, தினேஷ் கார்த்திக் அங்கே இருப்பது சில விநாடிகள் டி.வி-யில் காட்டப்பட, அதை ஸ்க்ரீன் ஷாட்டாக எடுத்து ரசிகர்கள் நெட்டில் உலாவவிட்டனர். இந்திய வீரர்கள் வெளிநாட்டுத் தொடர்களில் பங்கேற்க வேண்டும் என்றால், பிசிசிஐ-யின் அனுமதி பெறவேண்டியது அவசியம். இதையடுத்து, பிசிசிஐ, அனுமதிப் பெறாமல் சென்றதால், உங்களது மத்திய ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று கூறி, விளக்கம் கேட்டு தினேஷ் கார்த்திக்கிற்கு, ஒரு வாரகால அவகாசம் அளித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிரிக்கெட் வாரியம் அனுப்பிய நோட்டீசுக்கு பதில் அளித்த தினேஷ் கார்த்திக், ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கலம் தான், டிரின்பாகோ அணிக்கும் பயிற்சியாளர். எனவே அவர் அழைத்ததால் தான், நான் அங்கு சென்றேன். நான், அங்கு நடந்த எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. கடந்த 4-ம் தேதி நடந்த டிரின்பாகோ அணியின் முதல் போட்டியை, ஓய்வறையில் இருந்து பார்க்கலாம் என்று பிரெண்டன் மெக்கலம் அழைத்ததால் அங்கு சென்றேன்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன் அனுமதி இல்லாமல், அங்கு சென்றது தவறுதான். அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார். தினேஷ் கார்த்திக் உள்ளூர் போட்டியான ஐபிஎல்-ன் கேகேஆர் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். மேலும்  டிரின்பாகோ அணி மற்றும் கேகேஆர் இரண்டு அணிகளின் உரிமையாளர் ஷாருக்கான் என்பது குறிப்பிடத்தக்கது.