'இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடினதுக்கு'.. 'இது தண்டனையா?’.. பதறவைக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Jun 17, 2019 04:36 PM
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் படுசுவாரஸ்யமான மேட்ச் என்றாலே இந்தியா- பாகிஸ்தான் என்கிற நிலையில், இந்த இரு அணிகளுக்குமான மேட்ச் நேற்று நடந்தது.
இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து உலகெங்கிலும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய அணியின் அபாரமான ஆட்டத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், உத்திரப் பிரதேசத்தின் ராம்பூர் பேலா கிராமத்தைச் சேர்ந்த வினய் பிரகாஷ் எனும் நபர் இந்திய அணியைக் கொண்டாடியதால் அடித்தே கொல்லப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
பட்டியலினத்தைச் சேர்ந்த வினய் பிரகாஷ், உற்சாக மிகுதியால் சாலையில் ஆடிப்பாடி இந்திய அணியின் வெற்றியைக் கொண்டாடியுள்ளார். பின்னர் இரவு நேரத்தில் வினய் பிரகாஷின் குடிசை எரிந்து நாசமாகியதால் பரிதாபமாக வினய் பிரகாஷும் அதில் சேர்ந்து கருகிப் போயினார்.
இதுபற்றி அக்கிராமத்தைச் சேர்ந்த சிலர் பேசும்போது, மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சிலர் முதலில் வினய் பிரகாஷின் கொண்டாடத்தைத் தடுத்ததாகவும், பின்னர் இரவு நேரத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் வினய் பிரகாஷின் குடிசை எரிக்கப்பட்டதற்கும் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தோர்தான் காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனையடுத்து, எஸ்.சி./எஸ்.டி ஆணையம் இவ்விஷயத்தில் உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளதோடு இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களை காலம் தாழ்த்தாமல் கைதுசெய்யவும் ஆணையிட்டுள்ளது.