'பல்லாயிரம்' மக்கள் திரண்டிருந்த மைதானம் ... ஒருவருக்கு உறுதி செய்யப்பட்ட கொரோனா ...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமகளிர் டி 20 உலக கோப்பையின் இறுதி போட்டியை காண வந்த நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகளிர் டி 20 உலக கோப்பையின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் கடந்த எட்டாம் தேதி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியை எம்பது ஆயுரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கண்டுகளித்தனர். இந்நிலையில் அப்போட்டியைக் காண வந்த ரசிகர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மெல்போர்ன் கிரிக்கெட் மைதான நிர்வாகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சுகாதார மற்றும் மனித சேவைகள் துறை அந்த நபருக்கு ஏற்பட்ட தொற்று குறித்து கூறுகையில், 'அவரை சுற்றியுள்ள பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியதற்கான வாய்ப்பு மிகக் குறைவு தான்' என தெரிவித்துள்ளது. மேலும், 'அவர் மைதானத்தில் N42 பிரிவில் மைதானத்தின் வடக்கு பிரிவில் அமர்ந்திருந்தார். N42 பிரிவில் அமர்ந்திருந்தவர்கள் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றினால் மருத்துவ நிபுணருடன் கலந்தாலோசிக்க வேண்டும்' எனவும் சுகாதார மற்றும் மனித சேவைகள் துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வரும் நிலையில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறுமா என்பது குறித்த ஆலோசனையை வரும் 14 - ம் தேதி அன்று பிசிசிஐ ஆலோசிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.