"எனக்கு நம்பிக்கை இருக்கு".. கால்பந்து ஜாம்பவான் பீலே மருத்துவமனையில் அனுமதி.. ரசிகர்களுக்கு அவர் எழுதிய உருக்கமான பதிவு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகால்பந்து விளையாட்டின் ஜாம்பவானாக கருதப்படும் பீலே மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் எழுதியுள்ள உருக்கமான பதிவு அவரது ரசிகர்களை கலங்க செய்திருக்கிறது.

பிரேசில் மற்றும் கிளப் அணிகளான சாண்டோஸ் மற்றும் நியூயார்க் காஸ்மோஸ் அணிகளுக்காக ஸ்ட்ரைக்கராக விளையாடிய பீலே, காலத்தை கடந்த வீரராக கொண்டாடப்படுபவர். 1958, 1962 மற்றும் 1970 ஆகிய ஆண்டுகளில் பிரேசில் உலகக் கோப்பையை வெல்ல பீலேவின் பங்களிப்பும் முக்கிய காரணமாக இருந்தது. தன்னுடைய 22 வருட கால்பந்து விளையாட்டு வரலாற்றில் 1282 கோல்கள் அடித்து, பிரேசில் அணியின் எப்போதைக்குமான லெஜெண்ட் வீரராக கருதப்படுபவர் பீலே.
எட்சன் அராண்டஸ் டூ நசிமென்டோ (Edson Arantes do Nascimento) என்ற இயற்பெயர் கொண்ட பீலே, பிரேசிலின் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. செப்டம்பர் 2021 இல் கேன்சரால் அவர் பாதிக்கப்பட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அவரது பெருங்குடலில் இருந்து கட்டி ஒன்று அகற்றப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் கேன்சருக்கான கீமோதெரபி சிகிச்சைக்கு பீலேவின் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என பிரேசில் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இது உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், பீலே தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார்.
அதில்,"நான் தைரியமாக இருக்கிறேன், நிறைய நம்பிக்கையுடன் இருக்கிறேன். வழக்கம் போல் எனது சிகிச்சையைப் பின்பற்றுகிறேன். நான் பெற்ற அனைத்து கவனிப்புக்கு மருத்துவ மற்றும் நர்சிங் குழுவிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம், உலகம் முழுவதும் உங்களிடமிருந்து நான் பெறும் ஒவ்வொரு அன்பின் செய்தியும் என்னை முழு ஆற்றலுடன் வைத்திருக்கிறது. மேலும் உலகக் கோப்பையில் பிரேசிலையும் பாருங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். இது அவரது ரசிகர்களை நெகிழ செய்திருக்கிறது. பீலே உடல்நலம் பெற அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
