‘கொஞ்சம் நல்லா பாருங்க சார்.. இவங்களா வீக்கான டீம்’!.. முன்னாள் இலங்கை வீரருக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியமே கொடுத்த ‘வேறலெவல்’ பதிலடி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியை விமர்சித்த முன்னாள் இலங்கை வீரருக்கு அந்நாட்டு கிரிகெட் வாரியமே தக்க பதிலடி கொடுத்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஏ அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. வரும் ஜூலை 13-ம் தேதி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நடைபெற உள்ளது. இதற்காக இலங்கை சென்றுள்ள இந்திய அணி, அங்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, அங்கு இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதனால் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி, இலங்கை தொடரில் விளையாட உள்ளது.
இந்த நிலையில் இந்த தொடர் குறித்து இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜுனா ரணதுங்கா காட்டமாக பேசியிருந்தார். அதில், ‘இரண்டாம் தர இந்திய அணி இங்கு விளையாட வந்திருப்பது நமக்கு மிகப்பெரிய அவமானம். பணத்துக்காகவும், தொலைக்காட்சி மார்க்கெட்டிங் தேவைக்காகவும் இப்படிப்பட்ட தொடரை ஒப்புக்கொண்டதற்காக நமது கிரிக்கெட் நிர்வாகத்தையே சாடுவேன். சிறந்த அணியை இங்கிலாந்துக்கு அனுப்பிவிட்டு, பலவீனமான அணியை இந்தியா இங்கு அனுப்பியுள்ளது’ என அர்ஜூனா ரணதுங்கா தெரிவித்திருந்தார். இதற்கு இந்திய ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அர்ஜுனா ரணதுங்காவின் இந்த கருத்துக்கு இலங்கை கிரிக்கெட் வாரியமே பதிலடி கொடுத்துள்ளது. அதில், ‘இங்கு வந்துள்ள இந்திய அணியின் 20 வீரர்களில் 14 பேர் ஏற்கனவே இந்திய அணிக்காக வடிவங்களிலும் விளையாடியுள்ளனர். அதனால் இது ஒன்றும் இரண்டாம் தர அணி இல்லை’ என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இலங்கை தொடருக்காக இடம்பெற்றுள்ள இந்திய அணியில் கேப்டன் ஷிகர் தவான், துணைக் கேப்டன் புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்ட்யா, சஞ்சு சாம்சன், க்ருணல் பாண்ட்யா, ப்ரித்வி ஷா, சஹால், குல்தீப் யாதவ், மனிஷ் பாண்டே, தீபக் சாஹர், சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் உள்ளிட்ட வீரர்கள் ஏற்கனவே இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் விளையாடியுள்ளனர். இதில் ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், கிருஷ்ணப்பா கௌதம், சேத்தன் சக்காரியா, வருண் சக்கரவர்த்தி, நிதிஷ் ரானா உள்ளிட்ட 6 வீரர்கள்தான் அறிமுக வீரர்களாக களமிறங்க உள்ளனர். இவர்களும் ஐபிஎல் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.