தமிழகத்தில் மேலும் 'ஒரு வாரம்' ஊரடங்கு நீட்டிப்பு...! புதிய தளர்வுகள் என்ன...? - முழு விவரங்கள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jul 02, 2021 09:06 PM

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரம் நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

cm Stalin ordered the relaxation restrictions all districts

இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

கொரோனா தொற்று ஒன்றிய அரசால் பேரிடராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில், 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகளை 31-7-2021 வரை தொடர்ந்து அமல்படுத்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் 29.6.2021 அன்று அறிவித்துள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு 5-7-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், கொரோனா நோய்த் தொற்று வெகுவாக குறைந்துள்ள போதிலும், நோய்த் தொற்று பரவலைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு 5-7-2021 முதல் 12-7-2021 காலை 6.00 மணி வரை தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.

எவற்றிக்கெல்லாம் தடை தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது?

1) மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து

2). மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்து

3) திரையரங்குகள்

4) அனைத்து மதுக்கூடங்கள்

5) நீச்சல் குளங்கள்

6) பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள்

7) பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள்

8) பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்

9) உயிரியல் பூங்காக்கள்

10) நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

11) இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

எவற்றுக்கெல்லாம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது?

மக்களின் வாழ்வாதாரம், அத்தியாவசியத் தேவைகளைக் கருத்தில் கொண்டும், மாநிலத்தின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்து, 5-7-2021 முதல், அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் வழங்கப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். மேலும், ஏற்கனவே இரவு 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள், இரவு 8.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள தடை செய்யப்பட்ட செயல்பாடுகள் தவிர அனைத்து செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும்.

மேலும், கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளும் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படும்.

1) அரசு, மற்றும் தனியார் தொழில் சார்ந்த பொருட்காட்சி நிகழ்வுகள் (Business to Business Exhibitions) நடத்த அனுமதிக்கப்படும். உரிய அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் மட்டும் இதற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த அரங்குகளில் பொருட்காட்சி அமைப்பாளர் மற்றும் விற்பனைக் கூடங்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள், கட்டாயம் RTPCR பரிசோதணை அல்லது இரண்டு தவணைகளில் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

2)  உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் உள்ள உணவகங்களில் காலை 6.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை, உரிய காற்றோட்ட வசதியுடன், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.

3)  தேநீர் கடைகளில் நிலையான வழிகாட்டுமுறைகளை பின்பற்றி ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் தேநீர் அருந்த அனுமதிக்கப்படுவர்.

4) கேளிக்கை விடுதிகளில் (Clubs) உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுக்கள் மற்றும் உணவகங்கள் மட்டும் கொரொனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

5) தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படும்.

6) தங்கும் விடுதிகள், உறைவிடங்கள் (Hotels and Lodges), விருந்தினர் இல்லங்கள் (Guest Houses) செயல்பட அனுமதிக்கப்படும். அங்குள்ள உணவு விடுதிகள் மற்றும் தங்குமிடங்களில் (dormitory) 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பவர்.

7) அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ் வைப்பகங்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

8) உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் உரிய காற்றோட்ட வசதியுடன், ஒரு நோத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

9)  டாஸ்மாக் கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

10) அனைத்து வழிபாட்டுத் தலங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை.

11) அனைத்துக் துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள், உரிய காற்றோட்ட வசதியுடன், ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

12) வணிக வளாகங்கள் (Shopping Complex / Malls) காலை 9.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் 50% இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும். வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் மற்றும் விளையாட்டுக் கூடங்களுக்கு அனுமதி இல்லை.

13)  மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கிடையேயும், பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

14)  SRF/JRF, M.Phil., Phd., ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் கல்வி சார்ந்த பணிகளை (Educational Project Works) தொடர்புடைய கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். இவர்களின் கல்வி சார்ந்த பணிகளுக்காக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்.

15) அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம், SIRD போன்ற அரசு பயிற்சி நிலையங்கள்/மையங்கள், உரிய காற்றோட்ட வசதியுடன், 50% பயிற்சியாளர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில், செயல்பட அனுமதிக்கப்படும்.

16) பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள் (Entertainment / Amusement Parks) 50% வாடிக்கையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். முகக் கவசம் அணிதல், கிருமி நாசனி பயன்படுத்துதல் ஆகியவை நிர்வாகத்தால் முறையாக கடைபிடிக்கப்பட வேண்டும். இந்த பூங்காக்களில், திறந்த வெளியில் நடத்தப்படும் விளையாட்டுக்கள் மட்டும் அனுமதிக்கப்படும். தண்ணீர் தொடர்பான விளையாட்டுகளுக்கு (water sports) அனுமதி இல்லை.

17) மாவட்டங்களுக்கிடையே பயணிக்க இ-பாஸ்/இ-பதிவு நடைமுறை இரத்து செய்யப்படுகிறது.

18) அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொது மக்கள் கூடக்கூடிய இடங்களில் கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

19) கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் (hand sanitizer with dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் (thermal screening).

20) கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

21) குளிர் சாதன வசதி பயன்படுத்தப்படும் இடங்களில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறக்கப்பட்டு போதுமான காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.

22) கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

நோய்த் தொற்று கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்

1) நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் (Test-Track-Treat-Vaccination-Covid-19 Appropriate Behaviour) ஆகிய கோட்பாடுகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.

2) கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு, நோய்த் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை (Micro Level) வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.

3) வரையறுக்கப்பட்ட நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில், கீழ்க்கண்ட நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.

4) நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.

5) நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், நோய்த் தொற்று பரவலை கண்காணிக்க, குழுக்கள் அமைக்கப்பட்டு வீடு வீடாக தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும்.

6) அனுமதிக்கப்பட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கான நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தொடர்புடைய துறைகள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.

7) கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

8) கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை/ சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன்.

9) கொரோனா நோய்த் தொற்று மேலாண்மைக்கான விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவது கண்காணிக்கப்பட்டு, விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் நடவடிக்கைகள் தொடரும்.

மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டும்

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Cm Stalin ordered the relaxation restrictions all districts | Tamil Nadu News.