‘எனக்கு சுயமரியாதை இருக்கு’!.. ‘காசுக்காக மட்டும் இந்த வேலை பார்க்கல’.. அம்பயர் எடுத்த அதிரடி முடிவு.. கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவங்கதேச அம்பயர் திடீரென ஓய்வை அறிவித்தது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் வங்கதேசத்தில் தக்கா பிரீமியர் லீக் போட்டி ( Dhaka Premier Division Twenty20) நடைபெற்றது. அப்போது மோஹம்மெதான் ஸ்போர்ட்டிங் கிளப் மற்றும் அபஹானி லிமிட்டட் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி ஒன்று நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த மோஹம்மெதான் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்களை எடுத்தது.
இதனைத் தொடர்ந்து 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அபஹானி லிமிட்டட் அணி விளையாடியது. அப்போது மோஹம்மெதான் ஸ்போர்ட்டிங் கிளப் அணியின் கேப்டன் ஷாகிப்-அல் ஹசன் வீசிய ஓவரை முஷ்பிகுர் ரஹீம் எதிர்கொண்டார். அந்த ஓவரில் முஷ்பிகுர் ரஹீமின் காலில் பந்து படவே, உடனே அம்பயரிடம் ஷாகிப் அல் ஹசன் எல்பிடபுள்யூ கேட்டார். ஆனால் அம்பயர், அது அவுட் இல்லை என மறுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஷாகிப், தனது காலால் ஸ்டம்பை எட்டி உதைத்தார். இது சக வீரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து அபஹானி அணி 5.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்திருந்த போது, திடீரென மழை குறுக்கிடவே, போட்டியை நிறுத்துவதாக அம்பயர் அறிவித்தார். உடனே வேகமாக வந்த ஷாகிப், அம்பயர் அருகில் இருந்த மூன்று ஸ்டெம்ப்புகளையும் கையோடு பிடிங்கி, தரையில் வேகமாக தூக்கி வீசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஷாகிப்பின் இந்த செயலுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து ஷாகிப் மன்னிப்பு கேட்டார். ஆனாலும் ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரர் இப்படி நடந்து கொள்ளலாமா? என ஷாகிப் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
Genuinely unbelievable scenes...
Shakib Al Hasan completely loses it - not once, but twice!
Wait for when he pulls the stumps out 🙈 pic.twitter.com/C693fmsLKv
— 7Cricket (@7Cricket) June 11, 2021
இந்த நிலையில் வங்கதேச அம்பயர் மோனிருஸ்மான் (Moniruzzaman), திடீரென அம்பயரிங்கில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எல்லாம் போதும். நான் இனி அம்பயரிங் செய்ய விரும்பவில்லை. எனக்கு கொஞ்சம் சுயமரியாதை இருக்கிறது. அதனுடன் வாழ விரும்புகிறேன். அம்பயர்கள் ஒரு சில நேரங்களில் தெரியாமல் தவறு செய்ய வாய்ப்புள்ளது. ஆனால் நாங்கள் இப்படி நடத்தப்பட்டால், இனி அம்பயரிங் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. ஏனென்றால் நான் பணத்திற்காக மட்டும் இந்த வேலை செய்யவில்லை’ என கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘நான் அப்போட்டியில் கள அம்பயராக செயல்படவில்லை. ஆனால் அப்போட்டியை டிவியில் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது ஷாகிப் நடந்துகொண்ட விதத்தைப் பார்த்து என்னால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. அந்த கணமே அம்பயர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என முடிவெடுத்து விட்டேன்’ என மோனிருஸ்மான் கூறியுள்ளார். இது வங்கதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.