"இது தாங்க ஒரே 'காரணம்'... சும்மா சாக்கு போக்கு எல்லாம் சொல்லாதீங்க..." 'இந்திய' அணியை ஓவராக கிழித்த ஆஸ்திரேலிய 'கோச்'... 'சர்ச்சை' கருத்து!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுகு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் நடைபெறவுள்ளது.
பிரிஸ்பேன் பகுதியில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால், அங்கு இந்திய அணி வீரர்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளது. வழக்கத்தை விட இங்கு அதிக நாட்கள் இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளார்கள்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தின் இந்த கூடுதல் கட்டுப்பாடுகளை இந்திய அணி விரும்பவில்லை என்றும், கடைசி போட்டியை பிரிஸ்பேன் நகரில் நடத்த வேண்டாம் என்றும் இந்திய அணி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், இதனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் ஒப்புக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்திய அணி பிரிஸ்பேன் மைதானத்தில் ஆட மறுப்பதற்கான காரணம் என்ன என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் பிராட் ஹாடின் பரபரப்பு கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். 'ஆஸ்திரேலிய அணியை பிரிஸ்பேன் மைதானத்தில் வீழ்த்துவது கடினம். அவ்வளவு எளிதில் ஆஸ்திரேலிய அணியை அங்கு எந்த அணியும் எதிர்கொள்ள முடியாது. இதனால், ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இந்திய அணி அஞ்சுகிறது. அதனை சமாளிக்க வேண்டித் தான் கொரோனா விதிமுறைகளை இந்திய அணி குறை கூறுகிறது.
ஆஸ்திரேலியாவில் விதிமுறைகள் எப்படி என்பது தெரிந்து தான் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு விளையாட வந்துள்ளது. அதனால் அதனை பின்பற்றி தான் விளையாட வேண்டும். இதற்காக எல்லாம் மைதானத்தை மாற்ற முடியாது. இங்குள்ள விதிமுறைகள் இந்தியாவிற்கு மட்டும் பிரச்சனை என்றால் அவர்களுக்கு பயம் என்று தான் அர்த்தம். ஆஸ்திரேலிய அணிக்கும் இதே விதி தான். அவர்களும் நீண்ட காலமாக கொரோனா விதிகளை பின்பற்றி வருகிறார்கள். இந்தியாவிற்கு மட்டும் தனியாக யாரும் இங்கு கட்டுப்பாடுகள் விதிக்கவில்லை' என இந்திய அணியை விட்டு விளாசியுள்ளார்.
இந்திய அணியை குறிவைத்து ஆஸ்திரேலிய ஊடகங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருவது இந்திய அணி நிர்வாகத்திற்கும், அணியிலுள்ள வீரர்களுக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.