ஒரு கையில கேட்ச்.. MATCH-யே மாத்துன தருணம்.. கோலியை பாராட்டி அனுஷ்கா ஷர்மா போட்ட கியூட்டான போஸ்ட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின்போது விராட்கோலி பிடித்த அட்டகாசமான கேட்ச் பலரையும் கவர்ந்திருந்தது. இந்நிலையில், கோலியின் மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா கோலியின் முயற்சியை பாராட்டியுள்ளார்.
இந்த வருடத்துக்கான T20 உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகின்றன. இதற்காக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் பயிற்சி ஆட்டத்தில் மோதி வருகின்றன. அதே வேளையில், இந்த உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள் மற்றொருபக்கம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இதனிடையே நேற்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடின.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ராகுல் 33 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 57 ரன்கள் எடுத்திருந்தார். அதே போல, மிடில் ஆர்டரில் அதிரடி காட்டிய சூர்யகுமார், 50 ரன்கள் எடுத்திருந்தார்.
இதனை தொடர்ந்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி சேஸிங்கை துவங்கியது. ஆரம்பத்தில் இருந்தே ஆஸி வீரர்கள் அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டிருந்தது. 4 விக்கெட்கள் மட்டுமே ஆஸி கைவசம் இருந்தது. அப்போது முகமது ஷமி பந்துவீச வந்தார். முதல் இரண்டு பந்துகளில் 4 ரன்கள் சேர்க்கப்பட, கடைசி 4 பந்துகளில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது.
மூன்றாவது பந்தை எதிர்கொண்ட பேட் கம்மின்ஸ், அதை சிக்சருக்கு தூக்க, பவுண்டரி லைனில் இருந்த கோலி அதை எகிறி பிடித்து அனைவரையும் திகைப்படைய செய்தார். அடுத்த 3 பந்துகளிலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸி அணியை ஆல் அவுட் செய்தார் ஷமி. இதன்மூலம், இந்திய அணி அந்த போட்டியில் வெற்றி பெற்றது. இதற்கு கோலியின் கேட்சும் முக்கியமான காரணமாக அமைந்தது. அப்போது வர்ணனை செய்துகொண்டிருந்த சுனில் கவாஸ்கர்,"பீல்டிங்கிற்காக மட்டுமே அவர் அணியில் இடம் பெற தகுதியானவர், அதை மீண்டும் நிரூபித்துள்ளார்" என கோலியை பாராட்டியிருந்தார்.
இந்நிலையில், அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விராட் கோலி கேட்ச் பிடித்த வீடியோவை பகிர்ந்து "பியூட்டி, ஒரு கையால் சப்தம் எழுப்பக்கூடியவர்" (beauty! One-handed screamer!) எனக் குறிப்பிட்டுள்ளார்.