"நீங்க சொல்றத ஒண்ணும் அப்படியே ஏத்துக்க முடியாது.." 'மஞ்சரேக்கர்' கருத்தால் எழுந்த 'சர்ச்சை'.. 'பதிலடி' கொடுத்த 'இந்திய' வீரர்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் ஜூன் மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதற்காக இரு அணி வீரர்களும் இங்கிலாந்து சென்றடைந்த நிலையில், முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை எந்த அணி கைப்பற்றும் என்பதில் தற்போதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், இந்த போட்டிக்கான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) இடம்பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ள அஸ்வின், பல்வேறு சாதனைகளையும் படைத்து வருகிறார். இதனால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் அவர் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, அஸ்வின் பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் (Sanjay Manjrekar) தெரிவித்திருந்த கருத்துக்கள், பரபரப்பை ஏற்படுத்தியது. பல முன்னாள் வீரர்கள், டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் இன்னும் நிறைய சாதனைகளை படைப்பார் என்றும், தற்போதைய கிரிக்கெட் வீரர்களில் அவர் ஒரு ஜாம்பவான் என்றும் பாராட்டி வருகின்றனர்.
ஆனால், சஞ்சய் மஞ்சரேக்கரோ, அஸ்வினை ஆல் டைம் கிரேட் பவுலர் என பல முன்னாள் வீரர்கள் கூறுவதை நான் ஒருபோதும் ஏற்கமாட்டேன் என்றும், SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள்), அஸ்வின் ஒருமுறை கூட ஐந்து விக்கெட்டுகள் எடுத்ததில்லை என்றும், அப்படி இருக்கும் போது அவரை எப்படி எல்லா காலத்திலும் சிறந்த வீரராக என்னால் கருத முடியும் என்றும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்திருந்தார்.
டெஸ்ட் கிரிக்கெட் உலகின் நட்சத்திர வீரரான ஒருவரைப் பற்றி, சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்திருந்த கருத்து, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில், அதிகம் கோபத்தைக் கிளப்பியிருந்தது. இந்நிலையில், இந்திய வீரரான அபினவ் முகுந்த் (Abhinav Mukund), அஸ்வினுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
இது பற்றி பேசிய அவர், 'தற்போதைய கிரிக்கெட் உலகில், அஸ்வின் ஒரு லெஜண்ட் இல்லை என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்ததாக ஒரு செய்தியை நான் இன்று படித்தேன். ஆனால், மஞ்ச்ரேக்கரின் கருத்திற்கு நான் மரியாதையுடன் உடன்படவில்லை. அஸ்வின் மீதான குற்றச்சாட்டு என்னவென்றால், அவர் SENA (தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) நாடுகளில், 5 விக்கெட்டுகள் எடுத்ததில்லை என்பது தான்.
ஆனால், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் அஸ்வினுக்கு மிகவும் சிறப்பானதாக அமைந்தது. அந்த வகையிலும், டெஸ்ட் போட்டிகளில் அவர் எடுத்துள்ள 5 விக்கெட்டுகளின் எண்ணிக்கையும் பார்த்தால், எனது கருத்துப்படி, அஸ்வின் நிச்சயம் கிரிக்கெட் உலகின் லெஜண்ட் தான்' என அபினவ் முகுந்த் தெரிவித்துள்ளார்.