'ஜெயிக்கணும்னா இவங்கள பாலோ பண்ணுங்க'...'கோலி'க்கு அட்வைஸ்' செஞ்ச பிரபல வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | Apr 12, 2019 12:34 PM
12-வது ஐபிஎல் சீசன் டி20 தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியவில்லை.இதனால் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.இது பெங்களூரு ரசிகர்களை மட்டுமல்லாது,அந்த அணியின் கேப்டன் கோலியை வெகுவாக பாதித்துள்ளது.ப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற நிச்சயம் 6 போட்டிகளிலாவது வெற்றி பெற வேண்டும்.

இதனிடையே பெங்களூரு அணி இன்னும் 8 ஆட்டங்களில் விளையாட இருக்கிறது.அதில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே-ஆப் சுற்றுக்கு பெங்களூரு அணி தகுதி பெரும்.இதுவரை இல்லாத அளவிற்கு படு மோசமாக பெங்களூரு அணி விளையாடி வருகிறது.சரியான வீரர்களைத் தேர்வு செய்யாததும்,களத்தில் வீரர்கள் எவ்வாறு செயல் படவேண்டும் என்கிற வியூகங்களை வகுக்காததுமே தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பெங்களூரு அணியின் மூத்த வீரர் ஏபி டிவில்லியர்ஸ்,அணியின் தோல்வி குறித்து ஆங்கில நாளேடு ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது 'பெங்களூரு அணி தனது சொந்த மைதானத்திலேயே வெல்ல முடியாமல் போனது தான் அணிக்கு மிகப்பெரிய சரிவாக அமைந்தது.டி20 போட்டிகளில் வெல்ல நிச்சயம் சொந்த மண்ணில் ஜெயித்து காட்ட வேண்டும்.அப்போது தான் ரசிகர்களுக்கு அணியின் மீதான ஆர்வமும் ,வீரர்களுக்கு நம்பிக்கையும் ஏற்படும்.
சொந்த மண்ணில்,சொந்த ரசிகர்கள் முன்னிலையில் விளையாடும் போது ஒரு நிலைத்தன்மையும்,நம்பிக்கையும் இருக்கும்.அது ஆடுகளத்தை அறிந்து கொள்வதற்கும்,சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் வீரர்களை பயன்படுத்தி கொள்வதற்கும் உதவும்.இதற்கு சென்னை அணியும் மும்பை அணியும் மிக பெரிய உதாரணம்.
சென்னை அணி தனது சொந்த மண்ணில் நடந்த பெரும்பாலான ஆட்டங்களில் வென்று வருவதற்கு இதுவும் மிகமுக்கியமான காரணம்.சேப்பாக்கம் மைதானம் மெதுவான ஆடுகளமாக இருந்தாலும், அதற்கு ஏற்றார்போல் தரமான சுழற்பந்துவீச்சாளர்களான ஹர்பஜன் சிங், ஜடேஜா, இம்ரான்தாஹிர் ஆகியோரைப் தோனி பயன்படுத்தி வருகிறார்.
மேலும் சரியான வியூகங்களை அமைத்து எதிரணி வீரர்களை திணறடித்து வருகிறார்கள்.எனவே இழந்த நம்பிக்கையை பெற பெங்களூரு அணி நிச்சயம் சொந்த மண்ணில் வெற்றி பெற வேண்டும்.அதற்கு சென்னை மற்றும் மும்பை அணியின் யுத்திகளை பின்பற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
