'மினிமம் பேலன்ஸ் வைக்காத மக்கள்'...'வங்கிகள் அள்ளிய தொகை'...அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்By Jeno | Nov 26, 2019 10:30 AM
பொதுத்துறை வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச தொகையை இருப்பு வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதித்ததன் மூலம், வங்கிகள் பெற்றிருக்கும் தொகை வாயை பிளக்கும் வகையில் அமைந்துள்ளது.
வங்கிகளில் குறைந்தபட்ச தொகையை இருப்புத் தொகையினை வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கிராமம், சிறு நகரம் மற்றும் நகரங்களுக்கு என இந்த அபராத தொகையானது வேறுபடுகிறது. ஒவ்வொரு வங்கிகளும் ஒவ்வொரு விதமான அபராத கட்டணத்தை வசூலிக்கின்றன. அதன்படி கடந்த நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள் வசூலித்த அபராத தொகையின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
பொதுத் துறை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதித்ததன் மூலம் 1,996.46 கோடி ரூபாயை கூடுதல் வருவாயாக பெற்றுள்ளன. இதுதொடர்பான தகவலை மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அடிப்படை சேமிப்பு கணக்கு, ஜன் தன் கணக்குகளில் இவ்வகையான அபராதம் வசூலிக்கப்படுவதில்லை என்றும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.
இதனிடையே அபராதம் மூலம் வங்கிகளுக்கு வந்திருக்கும் இந்த வருவாய் வாடிக்கையாளர்களிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.