'தமிழக' இளைஞர்களை 'குறிவைக்கும்' மோசடிக்கும்பல்... பின்னணியில்... மிகப்பெரிய 'நெட்வொர்க்' இருப்பதாக சந்தேகம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Dec 12, 2019 10:30 PM

தமிழக இளைஞர்களை வேலை வாங்கித்தருவதாக மோசடிக்கும்பல் ஒன்று ஏமாற்றி வருவதாகவும், இதில் மத்திய மற்றும்  மாநில அரசுகள் தலையிட வேண்டும் எனவும் கனிமொழி எம்.பி நாடாளுமன்ற அவையில் வலியுறுத்தி இருக்கிறார்.

Fraud Network Targeting TN youths, need action; Kanimozhi MP

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் ஜீரோ ஹவரில் பேசிய கனிமொழி எம்.பி, ''அண்மையில் தமிழகத்தில் வேலைவாய்ப்புத் தேர்வுகளில் ஊழல் நடந்த செய்தியும், அதில் பிரதமர் அலுவலகம் தலையிட்ட செய்தியும் வெளியானது. இப்போது தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களைக் குறிவைத்து ஒரு மோசடிக் கும்பல் புறப்பட்டுள்ளது. இவர்கள் தமிழ்நாட்டில் உள்ள 2-ம், 3-ம் நகரங்களில் உள்ள இளைஞர்களிடம் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்து பணம் பறிக்கின்றனர்.

இளைஞர்கள் ஏற்கெனவே வேலைவாய்ப்பின்மையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களால் தங்களின் கல்விக் கடனையே திருப்பிச் செலுத்த முடியாத நிலை இருக்கிறது. அவர்களின் குடும்பங்கள் நிதிச் சுமையில் இருக்கின்றன. இந்தநிலையில் இப்படிப்பட்ட மோசடிக் கும்பல் வேலைவாய்ப்பு என்ற பெயரில் இளைஞர்களிடம் பணம் பறிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

காவல்துறையில் வேலை வாங்கித்தருவதாக கூட வசூல் செய்கின்றனர். இதுதொடர்பாக செய்தித்தாள்களிலும் விளம்பரங்கள் வெளியாகி உள்ளன. இதனால் இதற்கு பின்னால் மிகப்பெரிய மோசடி நெட்வொர்க் இருக்குமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் இதை வேடிக்கை பார்க்காமல் இதில் தலையிட்டு சம்பந்தப்பட்டவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும்,'' என வலியுறுத்தி இருக்கிறார்.