‘10 வருசமா இப்படிதான் சமைக்கிறோம்’.. கிணறு தோண்டும்போது நடந்த ஆச்சரியம்.. வியக்க வைத்த குடும்பம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபத்து ஆண்டுகளாக வீட்டு கிணற்றில் இருந்து கிடைக்கும் வாயுவை பெண் ஒருவர் வீட்டு சமையல் எரிவாயுவாக பயன்படுத்தி வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழாவை அடுத்த ஆராட்டுவளியை சேர்ந்தவர்கள் ரமேசன்-ரத்தினம்மா தம்பதியினர். இவர்கள் தங்கள் வீட்டில் குடிநீருக்காக கடந்த 10 ஆண்டுக்கு முன்பு கிணறு ஒன்று தோண்டினர். அப்போது அந்த கிணற்றில் உள்ள தண்ணீர் நிறம் மாறி காணப்பட்டது. இதனால் அவர்கள் அந்த கிணற்றை மூடிவிட்டு அதன் அருகிலேயே மற்றொரு கிணறு தோண்டியுள்ளனர். அந்த கிணற்றில் இருந்து வித்தியாசமான வாயு வெளியாகியுள்ளது. அது சமையல் எரிவாயு போன்று வாடை அடித்துள்ளது.
உடனே ரமேசன் அந்த வாயுவை பற்றவைத்து பார்த்துள்ளார். அது எரிந்ததை கண்டு தம்பதியினர் ஆச்சரியம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து அந்த வாயுவை ஒரு குழாய் மூலம் வீட்டு சமையல் அறைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டனர். இதற்காக அருகில் உள்ள பிளம்பர் ஒருவரை அழைத்து அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். சமையல் அறைக்கு கொண்டு செல்லப்பட்ட வாயுவை அடுப்புடன் இணைத்து அதனை எரியவைத்துள்ளனர்.
அன்றிலிருந்து ரமேசன்-ரத்தினம்மா தம்பதியினர் அந்த வாயுவை கொண்டே வீட்டின் சமையல் வேலைகளை செய்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக வீட்டு கிணற்றில் இருந்து கிடைத்த வாயுவே அவர்கள் வீட்டு சமையல் எரிவாயுவாக பயன்படுத்தி வருவது, அக்கபக்கத்தினர் மூலமாக பெட்ரோலிய துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அவர்கள் உடனே சம்பந்தப்பட்ட வீட்டுக்கு சென்று, கிணற்றில் இருந்து வெளியாகும் வாயுவை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து கூறிய அதிகாரிகள், ‘இதுபோன்ற வாயு கசிவு சில இடங்களில் ஏற்படுவது இயற்கையான நிகழ்வு. இதில் எந்த ஆபத்தும் இல்லை. ஆனாலும் எங்கள் துறையின் உயர் அதிகாரிகள் இதுகுறித்து விரிவான ஆய்வு நடத்துவார்கள்’ என கூறினர்.
இதுதொடர்பாக தெரிவித்த ரத்தினம்மா, ‘எங்கள் வீட்டு கிணற்றில் இருந்து கிடைத்த வாயு மூலமே நாங்கள் சமையல் செய்து வருகிறோம். மழை காலங்களில் மட்டும் கிண்ற்றில் இருந்து வாயு வருவதில்லை. அப்போது அரசின் சமையல் கியாசை பயன்படுத்தி கொள்வோம்’ என அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
