"வேண்டும்... வேண்டும்... நீதி வேண்டும்!".. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்த 'தமிழ்' மொழி!.. ஸ்வாரஸ்ய சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெகசாஸ் விவகாரம் நாடாளுமன்றத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மாநிலங்களவையில் உள்ள அனைத்து எதிர்கட்சி எம்பிகளும் ஒன்றாக இணைந்து தமிழில் கோஷம் எழுப்பியுள்ளனர்.
பெகசாஸ் விவகாரம் இப்போது நாட்டில் மிகப் பெரிய பேசுபொருளாகியுள்ளது. இஸ்ரேல் நாட்டின் என்எஸ்ஓ குரூப் (NSO Group) நிறுவனத்தின் பெகாசஸ் உளவு செயலியைக் கொண்டு ஒருவரது மொபைலை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியும். இதன் மூலம் ஒருவர் யாருடன் பேசுகிறார், என்ன பேசுகிறார், எங்கு செல்கிறார் என அனைத்தையும் தெரிந்துகொள்ள முடியும். இது தொடர்பாக, கடந்த சில நாட்களாக பரபரப்பு தகவல்கள் வெளியானது.
அதாவது, பெகாசஸ் ஸ்பைவேரை பயன்படுத்திப் பல நாடுகளின் முக்கிய தலைவர்கள், அரசியல்வாதிகளின் மொபைல் போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக 'தி கார்டியன்', 'வாஷிங்டன் டைம்ஸ்' உள்ளிட்ட 16 ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேபோல இந்தியாவிலும் ராகுல் காந்தி, தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், திரிணாமுல் முக்கிய தலைவர்கள், 40 செய்தியாளர்கள் என பலரது செல்போன்களும் உளவு பார்க்கப்பட்டதாகச் செய்தி வெளியானது.
இந்தச் செய்தி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாள் வெளியானது. இதையடுத்து மழைக்கால கூட்டத்தொடரின் அனைத்து நாட்களிலும் இது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற நிலைக்குழு இதை விசாரிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோஷமிட்டு வருவதால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கியுள்ளது.
இந்த விவகாரத்தில் நேற்று நாடாளுமன்றத்தில் அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் 'தமிழ்' ஒன்றிணைத்துள்ளது. முதலில் பஞ்சாப் எம்.பி. ஜஸ்பீர் சிங், "வேண்டும்... வேண்டும்..." என்றும் கோஷமிடத் தொடங்க, அவரைத் தொடர்ந்து மற்ற உறுப்பினர்களும் அதில் இணைந்து கொண்டனர்.
அப்போது, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் "நீதி வேண்டும்" என்ற கோஷத்தை ஒருங்கிணைந்து எழுப்பத் தொடங்கியுள்ளனர். அதேபோல மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி ராஜ்யசபா எம்பிகள், "வேண்டும்... விவாதம் வேண்டும்" என தமிழில் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
பொதுவாக, மக்களவை மற்றும் மாநிலங்களவைகளில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் கோஷம் எழுப்புவார்கள். ஆனால், இந்த முறை வித்தியாசமாக எதிர்க்கட்சி எம்பிகள் அனைவரையும் தமிழ் மொழி இணைத்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "பொதுவாக, நாடாளுமன்றத்தில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் கோஷங்கள் எழுப்பப்படும். ஆனால், முதல் முறையாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து, "வேண்டும்... விவாதம் வேண்டும்" எனத் தமிழில் முழக்கமிட்டோம். அரசு வலுக்கட்டாயமாக மசோதாக்களை நிறைவேற்றும்போது நாங்கள் விவாதத்தை விரும்புகிறோம்" எனப் பதிவிட்டுள்ளார். அவரது ட்வீட் இப்போது வைரலாகி வருகிறது.
Normally, slogans in Parliament are in Hindi or English. Perhaps for the first time the Rajya Sabha chants in Tamil, when the entire Opposition shouted ‘Vendum. Vivadam Vendum.’ We want. We want debate — when the Govt was passing Bills forcibly.
— Jairam Ramesh (@Jairam_Ramesh) July 27, 2021