'பெகாசஸ்' சர்ச்சை!.. ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோரையும் வேவு பார்த்தது அம்பலம்!.. தோண்ட தோண்ட வெளிவரும் பகீர் தகவல்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்ராகுல்காந்தி, பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தொலைபேசி உரையாடல்கள் உளவு பார்க்கப்பட்டதாக பாரிஸை சேர்ந்த ஃபார்பிடன் என்ற ஊடக நிறுவனத்துடன் இணைந்து பல ஊடகங்கள் சர்வதேச அளவில் கூட்டாக விசாரணை மேற்கொண்டன.
இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனத்திடம் வேவு பார்ப்பதற்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் எண்கள் இருந்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, மெக்சிகோ, ஹங்கேரி பஹ்ரைன் உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்தவை என்று கூறப்படுகிறது.
குறிப்பாக இந்தியாவை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோரது செல்போன் எண்களும் பட்டியலில் உள்ளன. இதில் 2 அமைச்சர்கள் 3 எதிர்க்கட்சி தலைவர்கள் 40-க்கும் அதிகமான பத்திரிகையாளர்கள், நீதிபதி ஆகியோரின் எண்களும் அடக்கம். சமூக ஆர்வலர்கள் எண்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்று அதன் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்த எண்கள் வேவு பார்க்கப்பட்டவையா என்பதை உறுதி படுத்த ஆய்வு தொடர்வதாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனினும், சட்ட விரோத செயல்களை தடுக்கும் நோக்கிலேயே சாப்ட்வேர் விற்பனை என இஸ்ரேல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இந்த நிலையில் தான், இந்தியாவை உலுக்கும் அளவிலான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் செல்போன் மற்றும் அவரின் நண்பர்கள், ஆலோசகர்களின் செல்போன்கள் உளவுபார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா மற்றும் பல மத்திய அமைச்சர்களின் செல்போன்களும் ஒட்டுக் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுபோல மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினரும், மேற்குவங்க சட்டமன்ற உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜியின் செல்போனும் உளவுபார்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக உள்ள அஷ்வினி வைஷ்ணவின் போனும் உளவு பார்க்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாதாக யாரையும் மத்திய அரசு உளவு பார்க்கவில்லை என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக உள்ள அஷ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
