தீயில் பற்றி எரிந்த வீடு.. நெருப்பில் குதித்த போலீஸ்.. ஹீரோவான எஸ்.ஐ.!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | May 04, 2019 04:40 PM

திடீரென ஏற்பட்ட தீயில் பற்றி எரிந்த வீட்டிலிருந்து, சிலிண்டர் வெடிக்காமல் தடுக்க, நெருப்புக்குள் சென்ற எஸ்.ஐ.க்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.  

UP police officer walks into burning house retrieves lpg cylinders

உத்தரப்பிரதேசம் நொய்டாவில் உள்ள அலம்கானி பகுதியில் கீதா -புல்சிங் தம்பதியருக்கு சொந்தமான வீடு ஒன்று திடீரென்று தீப்பிடித்தது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட அந்த தம்பதி தீயணைப்புத்துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த எஸ்.ஐ. அகிலேஷ் குமார் தீக்சித் தலைமையிலான போலீசார், தீயை அணைக்க துரித நடவடிக்கை எடுத்தனர்.

அப்போது எரியும் வீட்டுக்குள் கேஸ் நிரப்பப்பட்ட இரண்டு சிலிண்டர்கள் இருப்பதாக அங்கிருந்த வீட்டின் உரிமையாளர் புல்சிங் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் சிறிதும் தாமதிக்காமல் உடனடியாக அருகில் இருந்த வீட்டிலிருந்து,  இரண்டு போர்வைகளை வாங்கிய அகிலேஷ் குமார் போர்வையை தன்மேல் சுற்றிக்கொண்டு நெருப்பில் எரிந்துக்கொண்டிருந்த வீட்டுக்குள் நுழைந்துவிட்டார். அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோக கையில் சிலிண்டருடன் அகிலேஷ் வெளியே வந்தார். 

சிலிண்டரை வெளியே எடுத்துவிட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. தன்னுடைய உயிரை பணயம் வைத்து மீட்புப்பணியில் ஈடுபட்ட அகிலேஷை, அப்பகுதி மக்கள் மட்டுமின்றி நொய்டா காவல்துறையும் பாராட்டியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. சிலிண்டரை எடுத்துக்கொண்டு அகிலேஷ் நெருப்பில் இருந்து வெளியே வரும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : #FIREACCIDENT #NOIDA #AKILESHKUMAR #VIRAL