'சீக்கிரம் எண்டு கார்டு போடலாம்'... 'அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொடுத்துள்ள நம்பிக்கை'... அதே நேரத்தில் கொடுத்த எச்சரிக்கை!
முகப்பு > செய்திகள் > உலகம்இளைஞர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறியுள்ளார்.
கொரோனா அமெரிக்காவைத் திணற வைத்துள்ளது என்றே சொல்லலாம். கொரோனா பரவல் அதிகமுள்ள 5 நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் ஜோபைடன் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி போடுவது என்ற திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்து வருகிறது. விரைவில் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் அமெரிக்க அரசு உள்ளது. இது தொடர்பாகப் பேசிய அமெரிக்க அதிபர் ஜோபைடன், ''அரசின் நடவடிக்கையால் ஜனவரி மாதம் முதல் கொரோனாவால் உயிர் இழப்புகள் 90 சதவீதம் குறைந்துவிட்டது.
இப்போது கொரோனாவுக்கு முன்பு இருந்தது போன்று மக்கள் வாழத்தொடங்கி இருக்கிறார்கள். எங்கள் போர்க்கால முயற்சியின் காரணமாக 150 நாட்களில் கொரோனா பரவலைத் தடுக்க தகுந்த நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறோம். 18.2 கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்கள் ஒரு டோஸ் தடுப்பூசியைச் செலுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் 90 சதவீத மூத்தவர்களும், 27 வயதுக்கு மேற்பட்ட 70 சதவீதம் பேரும் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த வார இறுதிக்குள் 16 கோடி பேர் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஜூலை 4-ந் தேதி அமெரிக்கச் சுதந்திர நாளுக்குப் பிறகு, கொரோனாவில் இருந்தும் விரைவில் விடுதலை பெறப்போகிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். மார்ச் மாதத்தில் நாங்கள் நிர்ணயித்த குறிக்கோள் நிறைவேறப்போகிறது. வணிகங்கள் மீண்டும் தொடங்கி உள்ளன. இதனால் முடங்கி இருந்த பொருளாதாரம் மீண்டும் அதிக வளர்ச்சி பெற்று வருகிறது.
தற்போது கொரோனா முழுமையாக விலகவில்லை என்றாலும் அமெரிக்கா மீண்டு வருகிறது. இது அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய சாதனை. இதற்குக் காரணம் அமெரிக்க மக்கள்தான். கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம் இன்னும் முடியவில்லை. டெல்டா வைரஸ் மாறுபாடு காரணமாக ஏற்படும் சிக்கல் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இது எளிதில் பரவக் கூடியது. எனவே அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்'' என அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.