இருக்குற இடத்துலயே பாதுகாப்பா இருங்க.. யாரும் வெளிய வர வேண்டாம்.. இந்திய மாணவர்களுக்கு தூதரகம் முக்கிய தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் முக்கிய தகவல் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது 10 நாட்களாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வந்தது. உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கிலேயே ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதில் கெர்சன், எனர்கோடர், மிக்கலேவ் உள்ளிட்ட நகரங்களை ரஷ்யா கைப்பற்றியது. இதனை அடுத்து உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள நகரங்களை கைப்பற்ற முயன்று வருகின்றன. அதனால் அப்பகுதிகளில் சிக்கியிருக்கும் இந்திய மாணவர்களை மீட்பதில் சிக்கல் நிலவி வருகிறது.
இந்த சூழலில் மீட்புப் பணிக்காக போர் நிறுத்தம் செய்யுமாறு ரஷ்யாவிடம் இந்தியா வலியுறுத்தி இருந்தது. இதனிடையே ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற இருதரப்பும் ஒப்புக்கொண்டன.
இதனைத் தொடர்ந்து உக்ரைனில் உள்ள மரியபோல், வோல்னோவாக்கா ஆகிய இரு நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா இன்று (05.03.2022) அறிவித்துள்ளது. அதன்படி, இந்திய நேரப்படி காலை 11.30 மணியில் இருந்து உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே உக்ரைனின் சுமி நகரில் இருந்து இந்திய மாணவர்கள், உயிரை பணயம் வைத்து ரஷ்ய எல்லையை கடக்க நடந்தே செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி (Arindam Bagchi) மாணவர்களுக்கு முக்கிய தகவல் தெரிவித்துள்ளார். அதில், இந்திய மாணவர்கள் இருக்கின்ற இடங்களிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் மாணவர்களுடன் இந்திய தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
