நல்ல குடிக்கலாம்.. சாப்பிடலாம்... என்ஜாய் பண்ணலாம்... அசர வைக்கும் பட்டப்படிப்பு!
முகப்பு > செய்திகள் > உலகம்குடி, உணவு மற்றும் வாழ்வு மட்டும் தான் படிப்பே என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆமாம், இது குறித்து மட்டும் படிக்கவே பிரான்ஸில் ஒரு முதுகலைப் பட்டப்படிப்பை பல்கலைக்கழகம் ஒன்று அறிமுகம் செய்துள்ளது.
உலகத்திலேயே முதல் முறையாக பிரான்ஸ் பல்கலைக்கழகம் ஒன்று, ‘குடி, உணவு, வாழ்க்கை’ என்னும் முதுகலைப் பட்டப்படிப்பை அறிமுகம் செய்துள்ளது. ஒவ்வொரு மனிதனும் நன்கு குடித்து, உண்டு வாழ்வை ரசித்து வாழ வேண்டும் என்ற கோட்பாடின் கீழ் இந்த படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரத்யேகமாகத் தயார்படுத்தவே இந்த பட்டப்படிப்பு உள்ளது. பிரான்ஸில் உள்ள மிகப் பிரபலமான சயின்சஸ் போ லில்லே என்னும் கல்வி நிறுவனம் தான் இந்த முதுகலை பட்டப்படிப்பை வழங்குகிறது. இந்தப் படிப்பு முழுக்க முழுக்க உணவு, மதுபானங்கள் மற்றும் தரமான வாழ்க்கை குறித்தே பாடங்கள் கற்பிக்கப்படும்.
இதில் உணவு பாடப்பிரிவில் உணவு நாகரிகம், உணவு தொழில்நுட்பம், அடுப்பாங்கரையில் பாலின பாகுபாடு அகற்றம் ஆகிய பல்வேறு தலைப்புகளைக் கொண்டு மாணவர்களுக்குப் பாடம் எடுக்கப்படுகிறது. மேலும், வாழ்க்கைத் தரம், மாமிசத்துக்கு மாற்றான பசுமை உணவு, விவசாய வரலாறு என உணவு சார்ந்த பல பகுதிகள் கற்றுத் தரப்படுகின்றன.
இந்த முதுகலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு டிவி ஊடகவியலாளர்கள், உணவு விமர்சகர்கள், உணவு டெலிவரி நிறுவனங்களில் உயர் பதவிகள் எனப் பல வேலைவாய்ப்புகளும் கொட்டிக் கிடக்கின்றன. இது போன்ற வாழ்வியல் சார்ந்த படிப்புகளை எதிர்காலத்தில் இந்த உலகை காக்கும் என விளக்கம் கொடுக்கின்றனர் இந்தப் படிப்பை கற்பிக்கும் பேராசிரியர்கள்.
எதிர் வரும் காலங்களில் சர்வதேச சவால்களுள் ஒன்றாக உணவு இருக்கும் என்று கூறும் இந்தப் பட்டப்படிப்பு நிச்சயம் மாணவர்களை இதுகுறித்த விழிப்புணர்வுகளுக்கு உள்ளாக்கும் போது அவர்கள் எதிர்காலத்தைக் காப்பார்கள் என இந்த முதுகலைப் படிப்பின் மாணவ தூதுவர் தெரிவித்துள்ளார்.