'உருமாறி வேகமாக பரவும் புதுரக கொரோனா வைரஸ்’... ‘தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்’.,.!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இங்கிலாந்தில் இருந்து தமிழகத்திற்கு வந்த 2800 பேர் 3 அடுக்கு வளையத்தில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் தற்போது கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து வேகமாக பரவி வருகிறது. தினசரியும் அங்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக கொடுக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும் நீக்கப்பட்டு தற்போது மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் அங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, பிரிட்டனில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள் மற்றும் கப்பல்களுக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. உலக நாடுகள் பிரிட்டனை தற்போது தனிமைப்படுத்தியுள்ளன. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வீரப்பட்டில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ‘லண்டனிலிருந்து வந்தவர்களின் மாதிரிகள் ஆய்வில் உள்ளது.
அவரோடு பயணித்த 37 பேரில் 33 பேருக்கு நோய் தொற்று இல்லை. கடந்த சில தினங்களில் தமிழகத்தில் உள்ள பல்வேறு விமான நிலையங்களுக்கு இங்கிலாந்திலிருந்து வந்த சுமார் 2,800 பேர் மருத்துவர்களின் முழு கண்காணிப்பில் உள்ளனர். லண்டனில் இருந்து தமிழகம் திரும்பியவரின் பரிசோதனை முடிவு இன்னும் வரவில்லை. அவர்கள் அனைவரும் சுகாதாரத்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை என 3 அடுக்கு வளையத்தில் கண்காணிப்பில் உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா முழு கட்டுப்பாட்டில் உள்ளது. பொதுமக்கள் உருமாறிய புது வகையான வைரசை நினைத்து தேவையற்ற பதட்டமோ, பயமோ கொள்ள வேண்டாம். நீலகிரி உள்ளிட்ட எந்த மாவட்டத்திற்கும் இங்கிலாந்திலிருந்து வந்தாலும் அவர்கள் முழுமையாக மருத்துவர்களால் கண்காணிக்கப்படுவர்’ என்று அவர் கூறினார்.

மற்ற செய்திகள்
