‘இன்னும் 40 அடி தோண்டுனா புதையல் கிடைச்சிடும்’!.. போலீசாருக்கு ‘ஷாக்’ கொடுத்த கும்பல்.. ஒரு வருடமாக யாருக்கும் தெரியாமல் நடந்த ‘பகீர்’ சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபுதையல் தேடி ஒரு வருடமாக திருப்பதி மலையில் 80 அடி சுரங்கம் தோண்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் முங்கு நாயுடு. இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு நெல்லூரில் இருந்து திருப்பதிக்கு குடிபெயர்ந்துள்ளார். அங்கு எம்.ஆர் பள்ளி பகுதியில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே சாமியார் ஒருவரை முங்கு நாயுடு சந்தித்துள்ளார். அப்போது திருப்பதி மலையில் 120 அடி சுரங்கத்தில் புதையல் இருப்பதாக சாமியார் கூறியுள்ளார். புதையல் கிடைக்க உள்ள ஆசையில், 6 பேரை வெளியூரில் இருந்து வரவழைத்து மலையைக் குடையும் வேலையை ஆரம்பிதுள்ளார்.
கடந்த ஒரு வருடமாக மலையை தோண்டு பணியை முங்கு நாயுடு செய்து வந்துள்ளார். இந்த சமயத்தில் நேற்றிரவு திருப்பதி அடுத்த மங்கலம் பகுதியில் சேஷாசல மலைக்கு செல்வதற்காக 3 பேர் காத்திருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த திருப்பது அலிபிரி போலீசார், அவர்களை விசாரித்துள்ளனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே, சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் மூவரிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது திருப்பதி மலையில் புதையல் தேடி சுரங்கம் தோண்டி வருவதாக தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், உடனே சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். அதில் சுமார் 80 அடி நீளத்துக்கு மலையில் சுரங்கம் அமைக்கப்பட்டிருந்துள்ளது. இன்னும் 40 அடி தோண்டினால் புதையல் கிடைத்துவிடும் என போலீசாரிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார், இதில் தொடர்புடைய மற்ற நபர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். திருப்பதி மலையில் புதையல் தேடி சுரங்கம் தோண்டிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.