'நீங்களே அம்மாவ அடக்கம் பண்ணிடுங்க...' 'கொரோனா உங்களுக்கு வராது, வாங்கிக்கோங்க...' பெற்ற தாயின் உடலை வாங்க மறுத்த மகன்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Apr 07, 2020 07:40 PM

கொரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்த தாயின் உடலை வாங்க மாட்டேன் என கூறிய பஞ்சாப் மாநில இளைஞரால் மருத்துவமனை  ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

A son refused to buy the body of a mother died of corona

இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4917 ஆக உயர்ந்துள்ளது. இந்த தொற்றில் இருந்து 387 சிகிச்சை பெற்று நலமடைந்துள்ளனர் மேலும் 141 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் லுதியானா பகுதியைச் சேர்ந்த 69 வயது பாட்டிக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டதால் அவரது குடும்பத்தார் பாட்டியை அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் கடந்த மார்ச் 31-ம் தேதி அனுமதித்துள்ளனர்.

மருத்துவமனை செய்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாட்டி நேற்று உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனை முடிவடைந்த பிறகு மருத்துவமனை நிர்வாகம் பாட்டியின் குடும்பத்தாருக்கு போன் செய்து உடலை வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். மருத்துவ நிர்வாகிகளிடம் பேசிய அவரது மகன், உடலை வாங்கினால் எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்றிக்கொள்ளும், நீங்களே உடலை அடக்கம் செய்துகொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவ நிர்வாகம் காவல் துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு நடந்த சம்பவங்களை விளக்கியுள்ளனர். அதையடுத்து மூதாட்டியின் மகனிடம் பேசிய காவல் அதிகாரி, உடலை அடக்கம் செய்யும் போது தேவையான அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்குவோம், உங்களுக்கு கொரோனா பரவாமல் பார்த்துக்கொள்கிறோம் என உறுதி அளித்தும் அந்த இளைஞர் உடலை வாங்க மறுத்துவிட்டார் .

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நகரின் கூடுதல் துணை ஆணையர் இக்பால் சிங் சந்து, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இறந்த பாட்டியின் உடலை வாங்க அவர்கள் குடும்பம் தயாராக இல்லை. பாட்டியின் மகன் கூட வரவில்லை. நாங்கள் இரண்டு முறை அவர்களின் குடும்பத்தாரை தொடர்பு கொண்டோம் ஆனால் அவர்கள் உடலை வாங்க மறுத்துவிட்டனர். எனவே நேற்று நள்ளிரவு மாவட்ட அதிகாரிகளே பணியாட்களின் உதவியுடன் மூதாட்டிக்கு இறுதிச் சடங்கு செய்து வைத்தனர். ஒரு சில குடும்ப உறுப்பினர்கள் மட்டும் 100 மீட்டர் தொலைவில் இருந்து வேடிக்கை பார்த்து விட்டு போய்விட்டனர் என கூறியுள்ளனர்.

சொந்த மகனே தன் தாயின் உடலை வாங்க மறுத்து, இறுதி சடங்கு கூட செய்யாமல் தட்டிக்கழித்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.