'அம்மா ரொம்ப ஆசபட்டாங்க'...'சுஷ்மா சுவராஜின்' கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Sep 28, 2019 01:10 PM
முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் கடைசி ஆசையை அவரது மகள் நிறைவேற்றியுள்ள சம்பவம் பலரையும் நெகிழச் செய்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி உடல்நல குறைவால் முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உயிரிழந்தார். அவர் இறப்பதற்கு முன்பு சில மணி நேரங்களுக்கு முன்பு, குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடிய ஹரிஸ் சால்வே இடம் பேசிக்கொண்டிருந்தார். இந்த நிகழ்வு குறித்து ஹரிஸ் சால்வே நெகிழ்ச்சியாக கூறியிருந்தார்.
இதுகுறித்து பேசிய அவர் '' அந்த சந்திப்பு மிகவும் உணர்வுப்பூர்வமான ஒன்றாகும். ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி அவரை சந்தித்த போது, அவர் எனக்கு கொடுக்க வேண்டிய ஒரு ரூபாய் கட்டணத்தை தர வேண்டும் என தெரிவித்தார். அதை நான் வாங்கி கொள்கிறேன் என கூறினேன். அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு வந்து வாங்கிக்கொள்ளுமாறு கூறினார். ஆனால் அன்று இரவே சுஷ்மா சுவராஜ் உயிரிழந்தார்'' என அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் சுஷ்மா சுவராஜால், ஹரிஸ் சால்வேவிற்கு கொடுக்க முடியாமல் போன ஒரு ருபாய் கட்டணத்தை சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி கொடுத்தார். இதுகுறித்து சுஷ்மா சுவராஜின் கணவர் சுவராஜ் கௌசல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,“சுஷ்மா சுவராஜின் கடைசி ஆசையை பன்சூரி நிறைவேற்றியுள்ளார். அவர் ஹரிஷ் சால்வேயை அழைத்து குல்பூஷண் ஜாதவ் வழக்கிற்கான அவருடைய கட்டணமான ஒரு ரூபாயை அளித்தார்” எனப் பதிவிட்டுள்ளார்.
அப்போதையை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சர்வதேச நீதிமன்றத்தில் நடந்து வந்த குல்பூஷண் ஜாதவ் வழக்கில் ஆஜராக ஹரிஷ் சால்வேயை நியமித்தார். அப்போது சுஷ்மா சுவராஜின் வேண்டுகோளுக்கு இணங்க ஹரிஸ் சால்வே ஒரு ரூபாய் கட்டணத்திற்கு இந்த வழக்கில் வாதாட ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
@sushmaswaraj Bansuri has fulfilled your last wish. She called on Mr.Harish Salve and presented the One Rupee coin that you left as fees for Kulbhushan Jadhav's case. pic.twitter.com/eyBtyWCSUD
— Governor Swaraj (@governorswaraj) September 27, 2019