மதுபானங்களை "ஹோம் டெலிவரி" செய்யத் தயாராகும் மாநிலங்கள்!.. வெளியான பரபரப்பு தகவல்!.. தமிழகத்தின் நிலை என்ன?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | May 11, 2020 04:48 PM

சத்தீஸ்கர், மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து 8 க்கும் மேற்பட்ட மாநிலங்கள் ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

state governments to implement home delivery of liquor

கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு, மத்திய உள்துறை அமைச்சகம் ஊரடங்கை சில தளர்வுகளுடன் மே 17 வரை நீட்டித்தது. அந்த தளர்வுகளின் அடிப்படையில் மாநிலங்கள், மதுபான கடைகளை திறந்தன. 40 நாட்களுக்கும் மேலாக மதுபானக் கடைகள் திறக்கப்படடாததால் கடைகளின் முன்பு மதுகுடிப்போரின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பெரும்பாலான கடைகளில் சமூக இடைவெளி என்பது கேள்வி குறியானது.

இதனையடுத்து, உச்சநீதிமன்றம் மதுபானங்களை மதுகுடிப்போர் வீடுகளுக்கே கொண்டு செல்லும் ஏற்பாடுகளை மாநில அரசுகள் செய்யலாம் என அறிவுறுத்தியது. அதன் படி சத்தீஸ்கர், மேற்கு வங்கம் , பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் முறையை நடைமுறைப்படுத்தின. இந்நிலையில், தற்போது இந்த நடைமுறையை இந்தியாவின் பல மாநிலங்கள் அமல்படுத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து சர்வதேச மதுபானம் மற்றும் வொயின் சங்கத்தின் தலைவர் அம்ரித் கிரண் கூறும் போது, "அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால் இங்கு மதுவிற்பனை நிலையங்கள் மிகக் குறைவாக உள்ளன. ஆகவே அங்கு மக்களிடையே சமூக விலகலை கொண்டு வர மதுபானங்களை அவர்களின் வீடுகளுக்கே மதுபானங்களை கொண்டுச் செல்லும் நடைமுறை அவசியமாகிறது. இதனை கருத்தில் கொண்டு அடுத்த இரண்டு வாரங்களில் குறைந்தது 7 முதல் 8 மாநிலங்கள் இந்த நடைமுறைக்கு பச்சைக் கொடி காட்டும் என எதிர்பார்க்கலாம்" என்றார்.

இந்த நிலையில், தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக மது விற்பனை செய்ய தடை விதிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கின் விசாரணையை மே 14ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.