மத்தியப் பிரதேசத்தில் அரியணை ஏறுகிறது பா.ஜ.க!... முதலமைச்சர் யார்!?... அவர் பின்னணி என்ன?
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்தியப் பிரதேச முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் இன்று இரவு 9 மணிக்கு பதவியேற்க இருக்கிறார்.

மத்திய பிரதேசத்தில் 22 எம்.எல்.ஏ.க்கள் சமீபத்தில் ராஜினாமா செய்ததை அடுத்து, கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இதனால், சட்டசபையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மற்றும் பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில், மத்தியபிரதேச முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகுவதற்கான தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் லால்ஜி டாண்டனிடம் கமல்நாத் வழங்கினார்.
இதன் தொடர்ச்சியாக, பா.ஜ.க. சார்பில் ஆட்சியமைப்பது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக அக்கட்சியின் சட்டமன்ற குழு கூட்டம் இன்று நடந்தது. அதில், மத்திய பிரதேச முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் இன்று பதவியேற்க கூடும் என தகவல் வெளியானது.
இந்த நிலையில், மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள ராஜ்பவனில் இன்றிரவு 9 மணிக்கு முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் பதவியேற்று கொள்கிறார். அவருக்கு ஆளுநர் லால்ஜி டாண்டன் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார்.
சிவராஜ் சிங் சவுகான் 2005ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை, தொடர்ந்து 3 முறை மத்தியப் பிரதேசத்தின் முதல்வராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
