15 வருடமாக மூடப்பட்ட மருத்துவமனை.. தனிமையில் வாழ்ந்து வந்த குடும்பம்.. மொத்த பேரும் சடலமாக மீட்பு.! மிரளவைத்த சம்பவம்.
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பை பகுதியில் அமைந்துள்ள பழைய மருத்துவமனை ஒன்றில், 3 பெண்கள் உட்பட 4 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே அமைந்துள்ளது காண்டிவாளி என்னும் பகுதி. இங்கே அமைந்துள்ள மருத்துவமனை ஒன்று, சுமார் 15 ஆண்டுகளுக்கு முன், பயன்படுத்தாமல் மூடப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த மருத்துவமனையில் கிரண் தால்வி என்ற பெண் ஒருவர், தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மூடப்பட்ட மருத்துவமனை
இந்தூர் பகுதியை பூர்வீகமாக கொண்ட தால்வியின் குடும்பத்தினர், மூடப்பட்டிருந்த மருத்துவமனையை வைத்திருந்தனர். இதில், கிரணின் கணவரும், சில ஆண்டுகளுக்கு முன்பு, குடும்ப தகராறு காரணமாக மீண்டும் இந்தூருக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. 15 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டுள்ள இந்த மருத்துவமனையின் கட்டிடத்தில், கிரண் தால்வி தனது இரண்டு மகள்களான முஸ்கான் தால்வி மற்றும் பூமி தால்வி ஆகியோருடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இவர்களின் டிரைவராக ஷிவ்தயாள் சென் என்பவரும் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்ததாக தெரிகிறது.
போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
இந்நிலையில் தான், மருத்துவமனையைச் சுற்றி நபர் ஒருவர் ஆயுதத்துடன் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. உடனடியாக, போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்ற நிலையில், மருத்துவமனையில் பூட்டிக் கிடந்த அறையை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுள்ளனர். அப்போது, இரண்டாவது மாடியில் கிரணின் உடலும், சமையலறையில் மகள் முஸ்கானின் உடலும் கிடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மருத்துவமனையில் சிக்கிய கடிதம்
தொடர்ந்து, ஷிவ்தயாள் மற்றும் பூமி ஆகியோரின் உடல் முதல் மாடியில், உள்ளே பூட்டப்பட்டிருந்த அறையில தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த மரணம் தொடர்பாக, ஷிவ்தயாள் பாக்கெட்டில் இருந்த சில கடிதங்களும் சிக்கியதாக தகவல்கள் குறிப்பிடுகின்றது. அதன்படி, நீண்ட நாள் பிரச்சனைகள் காரணமாக, சில தீவிர நடவடிக்கைகளை நாங்கள் எடுத்தோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, கிரண் மற்றும் முஸ்கான் ஆகியோரை ஷிவ்தயாள் மற்றும் பூமி ஆகியோர் கொலை செய்து விட்டு, இறுதியில் தாங்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், ஷிவ்தயாள் பயன்படுத்திய ஆயுதமும் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால், இது பற்றிய உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
15 ஆண்டுகளுக்கு முன், மூடப்பட்ட மருத்துவமனையில் தங்கி வந்தவர்கள் மர்மமாக இறந்து போயுள்ள சம்பவம், அப்பகுதியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.