"37 வருஷ கனவு சார்"..கணவர், மகன்களுக்கு தெரியாம 10வது தேர்வுக்கு படிச்ச பெண்.. ரிசல்ட்டை பார்த்து வாயடைத்துப்போன உறவினர்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 53 வயது பெண் ஒருவர் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று அசத்தியிருக்கிறார். இது அவரது உறவினர்களிடையே வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | மணமகள் தேவை.. முழு பயோ டேட்டாவுடன் போஸ்டர் அடிச்சு ஒட்டிய இளைஞர்.. வியந்துபோன மக்கள்..!
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் கல்பனா அச்யுத். 53 வயதான இவர் தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி 79.6 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். தனது 16 வயதில் தந்தை இறந்து போனதால் குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியாத சூழ்நிலையில் இருந்த கல்பனா தற்போது முப்பத்தி ஏழு வருடங்களுக்கு பிறகு தனது கனவினை நிறைவேற்றியுள்ளார். பத்தாம் வகுப்பில் தேர்வு எழுதுவதற்கு முன்னே படிப்பை விட்டுவிட்ட கல்பனாவிற்கு அதன் பிறகு திருமணம் நடைபெற்றதால் அவரால் தனது படிப்பினை மேலும் தொடர முடியாமல் போயிருக்கிறது. ஆனாலும் எப்படியாவது பத்தாவது படித்து தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என அடங்காத ஆசை தனக்குள் இருந்ததாக கூறுகிறார் கல்பனா.
ரகசிய கல்வி
தினந்தோறும் இரவு நேரத்தில் நடைபயிற்சிக்கு சென்று வருவதாக தனது கணவர் மற்றும் மகன்களிடம் கூறி விட்டு வெளியே செல்லும் கல்பனா இரவு நேர பள்ளியில் சேர்ந்து படித்து வந்திருக்கிறார். இதன் காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கிறார் கல்பனா. தனது முப்பத்தி ஏழு வருட கனவை சாத்தியமாக்க வேண்டும் என்று லட்சியத்துடன் தேர்வெழுதிய கல்பனா 79.6 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் இது குறித்து கல்பனாவின் மகன் பிரசாத் ஜம்பாலே சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை எழுதியிருக்கிறார். அதில் "எனது அம்மா கடந்த 2021 ஆம் ஆண்டில் இருந்து இரவு நேர பள்ளிக்கு சென்று வந்தார். வயது கடந்த பின்னரும் பத்தாவது படிக்க விருப்பப்படும் நபர்கள் சேரலாம் என அறிவிக்கப்பட்டிருந்ததால் எனது அம்மாவிற்கும் அதில் சேர்ந்து படிக்க ஆர்வம் ஏற்பட்டது. அரசே இலவசமாக இந்த வகுப்புகளை நடத்தி வந்தது எனது அம்மாவிற்கு தெரிந்திருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடைபயிற்சி
தற்போது அயர்லாந்தில் பணிபுரிந்து வரும் பிரசாத் இது குறித்து எழுதிய பதிவில் "நான் இரவு நேரங்களில் எனது அம்மாவிற்கு போன் செய்வது வழக்கம். சில முறை நான் போன் செய்தபோது, அவர் தான் வெளியே நடைபயிற்சிக்கு சென்றுள்ளதாகவும் உறவினர்களின் வீட்டிற்கு சென்றிருப்பதாகவும் கூறினார் ஆனால் அவர் இரவு நேர பள்ளிக்கு செல்கிறார் என்பது எனக்கு தெரியவில்லை. அது மட்டுமல்லாமல் எனது அப்பா மற்றும் சகோதரனுக்கும் இந்த விஷயம் தெரிந்திருக்கவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தனது தாய் அவர் படித்த மையத்திலேயே சிறந்த மாணவராக தேர்ச்சி பெற்றிருப்பது தங்களை பெருமை கொள்ளச் செய்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் பிரசாத். 53 வயதில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று தனது முப்பத்தி ஏழு வருட கனவை நிறைவேற்றியுள்ள கல்பனாவிற்கு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்
Also Read | செல்ல நாயால் அடிச்ச ஜாக்பாட்.. ஒரே நாளில் கோடீஸ்வரரான அதிர்ஷ்டக்காரர்..!

மற்ற செய்திகள்
