2022 -23 பட்ஜெட்: ராகுல் முதல் கமல்ஹாசன் வரை.. மத்திய பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் சொல்வது என்ன?
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் நதிகள் இணைப்பு, இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு, இ-பாஸ்போர்ட், 5 ஜி வசதி, டிஜிட்டல் கரன்சி, ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு, நெடுஞ்சாலை திட்டம், 400 வந்தே பாரத் ரெயில் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. இருப்பினும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
ராகுல் காந்தி
இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் தாக்கல் குறித்து ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தமிழ அரசியல் தலைவர்கள் தங்களது விமர்சனங்களை வைத்துள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, "மோடி அரசின் ஜீரோ பட்ஜெட். நடுத்தர வர்க்கத்தினர், சம்பளம் வாங்குவோர், ஏழைகள் , இளைஞர்கள், விவசாயிகள், சிறுகுறு தொழில் முனைவோர்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு பட்ஜெட்டில் எந்த சலுகையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி
அவரைத் தொடர்ந்து மம்தா பானர்ஜி, வேலையின்மை மற்றும் பணவீக்கத்தால் நசுக்கப்பட்டு கிடக்கும் இந்த வேளையில் சாதாரண ஏழை மக்களுக்கு பட்ஜெட்டில் ஜீரோதான் உள்ளது. எதையும் செயல்படுத்தாமல் பெரிய வார்த்தைகளால் அரசாங்கம் தோற்றுவிட்டது. இது பெகாசஸ் ஸ்பின் பட்ஜெட்' என்று தனது சமூகவலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி அறிக்கை
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசின் 2022-23ஆம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட் நதிநீர் இணைப்பு, விவசாயத் துறைக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான நிதி ஒதுக்கீடு, மக்களுக்கு வீடு வழங்கும் திட்டம், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, நெடுஞ்சாலைத் துறை, 5 ஜி சேவை, 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் என்றும் நம் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மதிமுக வைகோ அறிக்கை
"2022-23 ஆம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 முதல் 9.2 விழுக்காடு விழுக்காடு வரை இருக்கும் என்று, பொருளாதார ஆய்வு அறிக்கை கூறுவதை நிறைவேற்றுவதற்கான சாத்தியகூறுகள் இல்லை. கடந்த ஏழாண்டு கால பா.ஜ.க. அரசில் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோய் இருக்கின்றன என்பதுதான் உண்மை" என வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கே.பாலகிருஷ்ணன்
மத்திய அரசின் பட்ஜெட் நனைந்துபோன பட்டாசு போல இருக்கிறது என மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் பதிவு
'மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத #Budget2022 இது. பொருளாதார நசிவால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழைமக்களுக்கான திட்டங்கள், வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம், சிறுகுறு நடுத்தர தொழில்கள் மேம்பட உதவி என எதிர்பார்த்த அம்சங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது' என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
விசிக திருமாவளவன்
'வருமானவரியில் எந்தவித மாற்றத்தையும் அரசு கொண்டுவரவில்லை' என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்