'தமிழகச் சட்டமன்ற தேர்தல்'...'தன்னை சுற்றி சுற்றி வந்த செண்டிமெண்ட்'... ஆனா எல்லாவற்றையும் உடைத்து எறிந்த வைகோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 2006 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மதிமுக 35 இடங்களில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன்பின் 2011 சட்டப்பேரவை தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட முரண்பாடு உள்ளிட்ட காரணங்களால் தேர்தலைப் புறக்கணிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார்.
இதையடுத்து, 2016 சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் அங்கம் வகித்த மதிமுக, 25 இடங்களில் போட்டியிட்டு ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை. இதனால் தற்போதைய சட்டப்பேரவை தேர்தல், மதிமுகவுக்கு முக்கியமானதாகக் கருதப்பட்டது. இதற்கிடையே, திமுக கூட்டணியில் இடம்பெற்ற மதிமுகவுக்கு பல்லடம், மதுராந்தகம், மதுரை (தெற்கு), அரியலூர், வாசுதேவநல்லூர், சாத்தூர் ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இந்த 6 தொகுதிகளிலும் அதிமுகவை நேரடியாக எதிர்த்து, திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட்டது. இந்நிலையில், இத்தேர்தலில் மதிமுக 4 இடங்களில் வெற்றிவாகை சூடியுள்ளது. சாத்தூர் தொகுதியில் ஏஆர்ஆர் ரகுராமன், மதுரை தெற்கில் எம்.பூமிநாதன், வாசுதேவநல்லூ ரில் டி.சதன் திருமலைக்குமார், அரியலூரில் கே.சின்னப்பா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இதனிடையே இதுவரை சட்டப்பேரவை தேர்தலில் மதிமுக இடம்பெற்ற கூட்டணி வெற்றி பெற்றது இல்லை என்ற செண்டிமெண்ட் மதிமுகவைச் சுற்றியும் குறிப்பாக வைகோவைச் சுற்றி இருந்தது. சமூகவலைத்தளங்களில் கூட அதுதொடர்பான மீம்ஸ்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருந்தது. ஆனால் அந்த கணிப்புகளை எல்லாம் மதிமுக தகர்த்தெறிந்து தற்போது வெற்றி வாகை சூடியுள்ளது.