'ஒரு பக்கம் அதிகரிக்கும் கொரோனா'... 'முழு ஊரடங்கு வருமா'?... நிர்மலா சீதாராமன் தகவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்புள்ளதா என்பது குறித்து நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன், உலக வங்கி குழு தலைவர் டேவிட் மால்பாஸ் உலக வங்கிப்பணிகள் மற்றும் இந்தியாவில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது இந்தியாவில் நிலவும் சூழ்நிலைகள், எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி நிர்மலா சீதாராமன் உலக வங்கி குழு தலைவரிடம் எடுத்துக் கூறினார்.
இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் மோசமாக உள்ள நிலையில் இந்தியா என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்போகிறது என்பது பற்றியும் நிர்மலா சீதாராமன் உலக வங்கி குழு தலைவரிடம் விவாதித்தார். அப்போது ''கொரோனா தொற்று மோசமான நிலையில் இருந்தாலும் பெரிய அளவில் கடந்த காலத்தைப் போல பொது முடக்கம் அமல்படுத்தமாட்டோம்'' என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
தற்போது பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு 5 அம்ச திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதாவது பரிசோதனை, நோய் கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி திட்டம், நோயைக் கட்டுப்படுத்த நடத்தை விதிமுறைகள் ஆகிய 5 அம்ச திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். இதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
2-வது அலை ஏற்பட்டு இருந்தாலும் பெரிய அளவில் முடக்கம் செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை. பொருளாதாரத்தை முற்றிலும் முடக்கிவிடும் நிலைக்குச் சென்றுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். அதே நேரத்தில் நோயாளிகளை உள்ளூர் மட்டத்தில் தனிமைப்படுத்துவது, மைக்ரோ கட்டுப்பாட்டு மண்டலங்களை உருவாக்குதல் போன்றவற்றின் மூலம் நோய் கட்டுக்குள் வந்துவிடும் என்று நினைப்பதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உருவாக்கப்படுவது, அதன் பயன்பாடு குறித்தும் அவர்கள் விவாதித்தனர். இந்தியாவிலிருந்து தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படுவது குறித்து உலக வங்கி குழு தலைவர் பாராட்டினார்.

மற்ற செய்திகள்
