பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை .. இவ்வளோ திட்டங்கள் இருக்கா..? முழு விபரம்.!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை பயணம்
தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியமைத்ததற்கு பிறகு முதன் முறையாக இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி. மத்திய, மாநில அரசுத் துறைகளின் சார்பில் ரூ.31,400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை துவங்கி வைக்கவும் இருக்கிறார் பிரதமர். பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
பாதுகாப்பு
இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் டெல்லியில் இருந்து ஹைதராபாத் செல்லும் பிரதமர் மோடி அங்கே நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றபிறகு மாலை 5.15 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரை தமிழக முதல்வர், ஆளுநர் ஆகியோர் வரவேற்க உள்ளனர்.
விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக, அடையாறில் உள்ள ஐஎன்எஸ் தளத்திற்கு செல்லும் பிரதமர், அங்கிருந்து நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு மாலை 5.45 மணிக்கு வருகிறார். இதனால் சென்னை முழுவதும் 22,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நலத் திட்டங்கள்
75 கி.மீ தொலைவுள்ள ரூ. 500 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட மதுரை - தேனி இடையேயான ரயில் தடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர். அதேபோல, தாம்பரம்-செங்கல்பட்டு இடையேயான 30 கி.மீ தொலைவுக்கு ரூ. 590 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள ரயில் பாதையை மக்களுக்கு பிரதமர் அர்ப்பணிக்க இருக்கிறார்.
சென்னை - பெங்களூரு இடையே ஆந்திரா வழியாக ரூ.14,870 கோடி மதிப்பில் 262 கி.மீ. விரைவுச்சாலை, சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே 21 கி.மீட்டருக்கு ரூ.5,850 கோடியில் இரண்டு அடுக்கு 4 வழி உயர்மட்ட சாலை, நெரலூரு- தருமபுரி இடையே ரூ.3,870 கோடியில் 4 வழிச்சாலை, ரூ.720 கோடியில் மீன்சுருட்டி - சிதம்பரம் நான்கு வழிச்சாலை ஆகிய சாலை திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
28,500 கோடி
1,800 கோடி செலவில் சென்னை எழும்பூர், ராமேசுவரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ஆகிய 5 ரயில் நிலையங்கள் சீரமைக்கப்பட உள்ளது. சென்னை அருகே மப்பேட்டில் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் விதமாக மல்டி மாடல் லாஜிஸ்டிக் பார்க் அமைக்கப்படுகிறது. இவை உள்ளிட்ட 28,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்ட இருக்கிறார்.
அதேபோல, எண்ணூர் - செங்கல்பட்டு இடையே ரூ.850 கோடியில் அமைக்கப்பட்ட 115 கி.மீ. நீளத்துக்கான இயற்கை எரிவாயு குழாய் திட்டம், திருவள்ளூர் - பெங்களூரு இடையே 271 கி.மீ. தொலைவில் 910 கோடியிலான இயற்கை எரிவாயு குழாய் திட்டம் ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின்கீழ் குறைந்த செலவில் வீடு கட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் ரூ.116 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,152 வீடுகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார்.
அதன்பிறகு, தமிழக மக்களுக்கான நல கோரிக்கைகளை பிரதமரிடம் அளிக்கிறார் முதல்வர் ஸ்டாலின். பின்னர், நிகழ்ச்சியை முடித்துவிட்டு இரவே டெல்லிக்கு திரும்புகிறார் பிரதமர் மோடி.
Also Read | சுரங்கத்துல வேலை பார்க்குறப்போ பெண்ணுக்கு அடிச்ச ஜாக்பாட்...ஒரே நாள்ல லட்சாதிபதியான சுவாரஸ்யம்..!

மற்ற செய்திகள்
