“அவர் மட்டும் இல்லைன்னா 2007-லயே என் டெஸ்ட் கேரியர் முடிஞ்சிருக்கும்”.. முன்னாள் கேப்டன் செய்த உதவி.. உருக்கமாக பேசிய சேவாக்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅனில் கும்ப்ளேவால் தான் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியதாக வீரேந்திர் சேவாக் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் மிகச்சிறந்த தொடக்க வீரராக இருந்த வீரேந்திர் சேவாக், டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் அடித்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை 2007-ம் ஆண்டே முடிவுக்கு வந்திருக்கும் என்றும், அனில் கும்ப்ளேவால் தான் மீண்டும் அணியில் இடம் கிடைத்ததாக கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய சேவாக், ‘நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்தேன். ஆனால் பிற்காலத்தில் டெஸ்ட் அணியிலிருந்து நான் நீக்கப்படுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. எனக்கு ஆதரவு அளித்து வாய்ப்பு கொடுத்து இருந்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை அடித்திருப்பேன். அப்போதே என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிந்திருக்க வேண்டியது.
அனில் கும்ப்ளே கேப்டனாக வந்த பிறகுதான் என் கிரிக்கெட் வாழ்க்கைக்கு புத்துணர்ச்சியே கிடைத்தது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் முதல் 2 டெஸ்ட் போட்டியில் எனக்கு வாய்ப்பு தரப்படவில்லை. 3-வது டெஸ்ட் போட்டிக்கு முன்பு பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. அப்போது என்னிடம் பேசிய கும்ப்ளே, இந்த ஆட்டத்தில் நீ அரைசதம் அடித்தால், அடுத்த போட்டியில் விளையாட வாய்ப்பு தருவேன் என்று கும்ப்ளே கூறினார்’ என சேவாக் கூறியுள்ளார்.
அந்தப் போட்டியில் சேவாக் சதம் விளாசியதை அடுத்து பெர்த் டெஸ்டில் வாய்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அடிலெய்ட் டெஸ்டில் சேவாக் முதல் இன்னிங்சில் 63 ரன்களும், 2-வது இன்னிங்சில் 151 ரன்களும் அடித்து அணியை காப்பாற்றினார்.
இது குறித்து நினைவு கூர்ந்த சேவாக், ‘என் வாழ்நாளில் நான் அடித்ததில் அந்த 61 ரன்கள் தான் மிகவும் கஷ்டப்பட்டு அடித்தேன். எனக்கு அப்போது மிகவும் அழுத்தம் தரப்பட்டது. இதனை போக்க அம்பயரிடம் பேசி சிரிப்பேன், பிடித்த பாடலை ஹம்மிங் செய்து கொண்டே விளையாடினேன். அனில் கும்ப்ளே என் மீது வைத்த நம்பிக்கையை காப்பற்றுவதற்காகவே விளையாடினேன். சைமண்ட்ஸ் விவகாரத்தில் கும்ப்ளே கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். கும்ப்ளே மட்டும் இல்லை என்றால் அந்த தொடர் நடந்திருக்காது. ஹர்பஜன் கிரிக்கெட் வாழ்க்கையும் அப்போதே முடிந்திருக்கும்’ என சேவாக் கூறியுள்ளார்.