உண்ணிகள் மூலம் பரவும் ‘புதிய காய்ச்சல்’.. ‘தடுப்பூசி வேற இல்ல’.. உஷாரா இருக்க ‘அலெர்ட்’ பண்ணிய மாநிலம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா பெருத்தொற்று உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிதாக காய்ச்சல் பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் காங்கோ காய்ச்சல் பரவி வருகிறது. கிரிமியன் காங்கோ ரத்த கசிவு காய்ச்சல் என அழைக்கப்படும் இந்த காய்ச்சல் உண்ணிகள் மூலம் மனிதர்களுக்கு பரவுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குஜராத்தின் சில மாவட்டங்களில் இந்த காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அதையொட்டி மகாராஷ்டிரா மாநில எல்லையில் அமைந்துள்ள மாவட்டங்களுக்கு பரவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நோயை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால், 40 சதவீத நோயாளிகள் இறக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது. இந்த நோயினால் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தாலும் காய்ச்சல் பரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காய்ச்சலுக்கு தடுப்பூசி கிடையாது என்பதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நோய்க்கான அறிகுறி தலைவலி, கடுமையான காய்ச்சல், மூட்டு வலி, வயிற்று வலி, குமட்டல், கண்கள் சிவத்தல், மூக்கு வழியாக ரத்தம் கசிதல் உள்ளிட்டவைகள் அறிகுறிகளாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.