'அடுத்தடுத்து தடை விதிக்கும் மாநிலங்கள்'... 'தீபாவளிக்கு கண்டிப்பாக இதப் பண்ணக் கூடாது'... 'கடும் எச்சரிக்கை விடுக்கும் மாநில அரசுகள்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாவரும் தீபாவளிக்கு பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க பல்வேறு மாநிலங்களும் திட்டமிட்டு, அடுத்தடுத்து உள்ளதரவு பிறப்பித்து வருகின்றன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை முடிவுக்கு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் முயன்று வருகின்றன. ஆனாலும் கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வந்தபாடில்லை. இந்த சூழ்நிலையில் பண்டிகை காலத்தால் ஏற்படும் காற்று மாசு மற்றும் குளிர் காலம் உள்ளிட்டவையும் கொரோனா பரவலுக்கு சாதகமாக அமையும் என்று சொல்லப்படுகிறது.
தீபாவளி தினத்தன்று பட்டாசுகள் வெடிப்பதால், காற்று மாசுபாடு ஏற்பட்டு கோவிட்-19 நிமோனியா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்றும், அதிலிருந்து வெளியேறும் புகை சுவாச கோளாறை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் ராஜஸ்தான் மாநில அரசு தடை விதித்தது.
இந்நிலையில் ஒடிசா மாநில அரசும் வரும் 10 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை பட்டாசுகள் விற்கவும், வெடிக்கவும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. பட்டாசுகள் வெடித்தால் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.
இம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையில் இருக்கிறது. குளிர் காலம் வரவுள்ளதால் முதியவர்கள், குழந்தைகள், ஏற்கனவே உடல்நலப் பாதிப்பு கொண்டவர்களுக்கு சுவாசப் பாதிப்புகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. வட மாநிலங்களை தொடர்ந்து, சிக்கிம் மாநிலமும் பட்டாசு வெடிக்க விற்பனை செய்ய தடை விதித்துள்ளது.
மேலும் மேற்கு வங்கத்தில் பட்டாசு வெடிக்க தடை ஏதும் விதிக்கப்படவில்லை. அதேநேரம் காளி பூஜை மற்றும் தீபாவளியின்போது பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என அம்மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது. பசுமைப் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பட்டாசு வெடிக்க தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.