'யானை புகுந்த நிலம்' .. இன்றைய மத்திய ஆட்சி எப்படி இருக்கு? அப்பவே 'புறநானூறுல' .. கலகல வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Jul 05, 2019 08:05 PM
மோடி தலைமையிலான புதிய இந்திய அரசின், புதிய பட்ஜெட்டை, புதிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்து, வாசித்தார்.
அந்த பட்ஜெட்டில், 2030-ஆம் ஆண்டு ரயில்வே துறையில் 50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு, எலக்ட்ரிக் பேட்டரி வாகனங்களுக்கு சலுகைகள், ஒரேநாடு; ஒரே மின்சார விநியோகத் திட்டம், குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கான விபரங்களை நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
மேலும் பேசியவர், கடந்த ஐந்தாண்டுகளில் நேரடி வரி வருவாய் 78 சதவீதம அதிகரித்ததால், அதாவது 6.3 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 11.37 லட்சம் கோடி ரூபாய் வரை உயர்ந்திருப்பதால், தவறாமல் வரி கட்டும் மக்களுக்கு நன்றி சொன்னதோடு, இந்த இடத்தில், ஒரு புறநானூறு பாடலை பாடுவதற்கு அனுமதி வேண்டும் என்றும், அதற்கென தமிழில் பேச வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட நிர்மலா சீதாராமன், யானை புகுந்த நிலம் என்கிற அந்த பாடலின் வரிகளுக்கு விளக்கம் கூறினார்.
புறநானூறு பாடல்:
காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே,
மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம்போலத்,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே.
நிலத்தில் விளையும் நெற்களை உணவாக்கி யானைக்கு பல காலம் கொடுக்கலாம். ஆனால் நூறு வயல்கள் இருந்தாலும், அதில் யானை புகுந்தால் வயலை நாசம் செய்துவிடும், அது போல் அறிவார்ந்த அரசன் வரி திரட்டும் முறை அறிந்து திரட்டினால் நாட்டின் கருவூலம் தழைக்கும்; தவறான ஆலோசனைகளைக் கேட்டு கொள்ளை வரி திரட்டினால், தானும் கெட்டு, தன் நாடும் கெட்டு, உலகமும் கெடும் என்பதுதான் இந்த பாடலுக்கான விளக்கம்.
பாண்டிய மன்னன் அறிவுடை நம்பி, தவறான ஆலோசனைகளைக் கேட்டு, மக்களிடம் அதிக வரிவசூல் செய்ததால், அதைச் சுட்டிக் காட்டி திருத்தும் முனைப்பில் புலவர் பிசிராந்தையார் எழுதிய இந்தப் பாடலை, மோடியின் ஆட்சியில் சரியாக வரிவசூல் செய்யப்பட்டிருப்பதற்கு ஒப்பிட்டு பேசிய நிர்மலா சீதாராமன், அன்றே பிசிராந்தையார் புறநானூறு பாடலில் கூறியிருப்பது போல், தங்களுக்கு யாரையும் நாசப்படுத்தும் நோக்கம் இல்லை என்று விளக்கமளித்துள்ளார்.