'அடுத்தடுத்த அதிரடிகளால் அசத்தும் அமேசான்!'... 'வெளியான புது அறிவிப்பால் குஷியில் இந்திய ஊழியர்கள்!!!'...
முகப்பு > செய்திகள் > வணிகம்ஆன்லைன் நிறுவனமான அமேசான் இந்தியா அதன் ஊழியர்களுக்கு சிறப்பு போனஸ் ஒன்றை அறிவித்துள்ளது.

உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் பல நிறுவனங்கள் வேலை குறைப்பு, சம்பள குறைப்பு, சம்பள உயர்வு நிறுத்தி வைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் வேலைக்கே உத்தரவாதமில்லாத குழப்பமான மனநிலையே ஊழியர்கள் பலரிடமும் நீடித்து வருகிறது. இதற்கிடையே சமீப காலமாகவே ஆன்லைன் நிறுவனமான அமேசான் அதன் ஊழியர்களுக்கு பல சலுகைகளை அறிவித்து வருகிறது.
அந்த வரிசையில் அமேசான் திங்களன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியாவிலுள்ள அதன் ஊழியர்களுக்கு ரூ 6,300 வரை "சிறப்பு அங்கீகார போனஸ்" வழங்குவதாகக் கூறியுள்ளது. மற்ற நாடுகளில் உள்ள ஊழியர்களுக்கும் இதேபோன்ற ஊதியம் வழங்கப்படுவதும், அமேசான் பெரிய லாபம் ஈட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு மேற்கொள்ளப்பட்ட #MakeAmazonPay என்ற உலகளாவிய பிரச்சாரத்தின் இடையே இந்த அறிவிப்பு வந்துள்ளதும் கவனிக்கப்பட வேண்டியது.
இந்தியாவில் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை இந்நிறுவனத்தால் பணியிலமர்த்தப்பட்ட இந்திய ஆபரேஷனல் ஊழியர்களில் முழுநேர ஊழியர்களுக்கு ரூ 6300 மற்றும் பகுதிநேர ஊழியர்களுக்கு ரூ 3,150 போனஸாக வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற விடுமுறை ஊதிய ஊக்கத்தொகைகளுடன் இணைந்து, இந்த காலாண்டில் மட்டும் எங்கள் தொழில்துறை ஊதியத்திற்கு மேல், முன்னணி வரிசை பணியாளர்களுக்கான கூடுதல் ஊதியத்தில் 750 மில்லியன் டாலர்களை முதலீடு செய்கிறோம் எனவும் அந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த நிலையில், அவர்களுக்கு இடைவிடாது பணியாற்றி தேவையானதை, தேவையான இடத்தில் டெலிவரி செய்த இந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு இதுபோன்று வழங்கப்படும் போனஸ்கள் அவர்களுடைய உழைப்புக்கு கிடைக்க வேண்டிய வெகுமதியே ஆகும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட அடுத்த ஆண்டு ஜூன் 2021 வரை அமேசான் ஊழியர்கள் வீட்டில் இருந்தே அதன் ஊழியர்கள் பணிபுரியலாம் எனக் கூறியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
