‘மிரட்டும் கொரோனா பாதிப்பு’!.. இனி ஞாயிற்றுக்கிழமை தோறும் ‘முழு ஊரடங்கு’.. அதிரடியாக அறிவித்த மாநிலம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா பரவலை தடுக்க ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என உத்தரப்பிரதேச மாநிலம் அறிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு நாள் மட்டும் 14,404 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 85 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அம்மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,18,293 ஆக உயர்ந்துள்ளது.
இதில் உத்தர பிரதேசத்தின் லக்னோ, பிரயாக்ராஜ், வாரணாசி, கான்பூர் நகர், கவுதம புத்த நகர், காசியாபாத், மீரட், கோரக்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, இந்த மாவட்டங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று இரவு 8 மணியில் இருந்து காலை 7 மணிவரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் டுவிட்டரில் தெரிவித்தார்.
இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. மேலும் முகக்கவசம் அணியாமல் வெளியே வருவோருக்கு 10,000 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
