கரண்ட் பில்லை பாத்துட்டு ஹாஸ்பிட்டலில் அட்மிட்டான குடும்பத்தினர்.. 1 மாசத்துக்கு இவ்வளவு கோடி கட்டணமா?.. அமைச்சரே கொடுத்த விளக்கம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு குடும்பத்தினருக்கு மின் கட்டணம் 3,400 கோடி ரூபாய் விதிக்கப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | 3 நாளா திறக்காத வீடு.. ஜன்னல் வழியா போலீஸ் பார்த்த காட்சி.. திடுக்கிட வைத்த சம்பவம்
மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரத்தில் உள்ள ஷிவ் விஹார் காலனியை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத் குப்தா. இவருக்கு சில தினங்களுக்கு முன்பு கடந்த மாதத்திற்கான மின்கட்டண குறுஞ்செய்தி வந்திருக்கிறது. அதை பார்த்ததும் ராஜேந்திர பிரசாத் அதிர்ச்சியடைய, இந்த விஷயத்தை தனது மனைவியிடத்தில் கூறவே அவரும் அந்த மெசேஜை பார்த்து திகைத்திருக்கிறார்.
3,400 கோடி ரூபாய்
ராஜேந்திர பிரசாத் குப்தாவுக்கு கடந்த மாதத்திற்கான மின்கட்டணமாக 34,19,53,25,293 ரூபாய் விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இருவருக்கும் ரத்த அழுத்தம் அபாய கட்டத்துக்கு சென்றுள்ளது. இதனை தொடர்ந்து தனது மகள் பிரியங்காவிடமும் இதுபற்றி கூறியுள்ளார் ராஜேந்திர பிரசாத். தொடர்ந்து ரத்த அழுத்தம் குறையாததால் கணவன் மனைவி இருவரும் உள்ளூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுபற்றி பேசிய பிரியங்காவின் கணவர் சஞ்சீவ் கன்கனே,"சென்ற மாதத்துக்கான கரண்ட் பில்லை பார்த்ததும் எனது மாமியார் மற்றும் மாமனாருக்கு ரத்த அழுத்தம் உயர்ந்துவிட்டது. அதன் காரணமாக இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது" என்றார். இதனை தொடர்ந்து பிரியங்கா தனது தாய் மற்றும் தந்தை ஆகியோருடன் சென்று புகார் அளித்திருக்கிறார்.
தவறு
இந்நிலையில், இந்த நிகழ்வு அம்மாநிலம் முழுவதும் வைரலாக பரவியது. மேலும், மின்சாரத்துறை அமைச்சர் பிரத்யுமன் சிங் தோமர் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுகுறித்து அவர் பேசுகையில்,"ரீடிங் எடுக்கும்போது ஏற்பட்ட தவறினால் இந்த பிழை ஏற்பட்டிருக்கிறது. கணினியில் மின் நுகர்வுக்கு பதிலாக மின் நுகர்வோர் எண்ணை மின் துறை ஊழியர் ஒருவர் குறிப்பிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து ஒரு பணியாளரை பணி இடைநீக்கம் செய்திருக்கிறோம். விசாரணை நடத்தப்பட்டு, இந்த தவறு எதிர்காலத்தில் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். இதனையடுத்து, ராஜேந்திர பிரசாத்தின் வீட்டுக்கு மீண்டும் ரீடிங் எடுக்கப்பட்டு அவருக்கு 1,300 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு குடும்பத்தினருக்கு 3,400 கோடி ரூபாய் மின்கட்டணம் விதிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
