"குரங்கு அம்மை பற்றி மக்கள் பயப்படவேண்டாம்.. ஆனா இத மட்டும் கட்டாயம் செஞ்சிடுங்க".. வலியுறுத்திய இந்திய அரசு.. முழு விபரம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுரங்கு அம்மை பற்றி மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர். வினோத் குமார் பால் தெரிவித்துள்ளார்.

குரங்கு அம்மை
வைரஸ் தாக்குதலால் ஏற்படும் அரியவகை நோய் தான் இந்த குரங்கு அம்மை. இதில் மொத்தம் இரண்டு வகை மரபணுக்களை கொண்ட வைரஸ்கள் இருக்கின்றன. முதலாவது பிரிவைச் சேர்ந்த வைரஸ், மத்திய ஆப்பிரிக்க நாடுகளிலும் இரண்டாவது வகை மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் கண்டறியப்பட்டது. தற்போது 72 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த நோயினால் 16,000 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார ஆணையம் தெரிவித்திருக்கிறது.
குரங்கு அம்மை பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கம், சோர்வடைதல் ஆகியவை ஏற்படலாம். மேலும், இந்த நோயின் அறிகுறிகள் தோன்றிய 5 நாட்களுக்குள் உடலில் சிகப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். பின்பு அவை கொப்பளங்களாக மாறும். அடுத்த 2-4 வாரங்களில் இந்தக் கொப்பளங்கள் மறைந்து உதிர்ந்து விடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
பயப்பட தேவையில்லை
இந்நிலையில், குரங்கு அம்மை கொரோனா போல தீவிரமாக பரவாது எனவும் அதனால் பொதுமக்கள் பயப்பட தேவையில்லை எனவும் நிதி ஆயோக்கின் உறுப்பினர் டாக்டர். வினோத் குமார் பால் தெரிவித்திருக்கிறார். இதுபற்றி அவர் பேசுகையில்,"மக்கள் குரங்கு அம்மை குறித்து பீதி அடைய தேவையில்லை. கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் உங்களுக்கோ அல்லது உங்களது தெரிந்தவர்களுக்கோ குரங்கு அம்மை அறிகுறிகள் இருந்தால் அது குறித்து தெரிவிக்கப்பட வேண்டியது குடிமகனின் பொறுப்பாகும். அதை மறைக்க வேண்டாம். உடனடியாக சிகிச்சை பெறுங்கள்" என்றார்.
பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்திய அவர்,"கேன்சர் போன்ற பிற நோய்த்தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். என்னுடைய முக்கிய செய்தி என்னவென்றால் பீதி அடைய வேண்டாம். இது கோவிட் போல வேகமாக பரவும் நோய் அல்ல" என்றார்.
இந்தியாவில் நிலைமை என்ன?
இந்தியாவில் இதுவரையில் 3 குரங்கு அம்மை தொற்றுகள் பதிவாகியுள்ளன. இவை மூன்றுமே கேரள மாநிலத்தில் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் அவர்கள் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் குவாரண்டைனில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் அறிவித்திருக்கிறார்.

மற்ற செய்திகள்
