3 நாளா திறக்காத வீடு.. ஜன்னல் வழியா போலீஸ் பார்த்த காட்சி.. திடுக்கிட வைத்த சம்பவம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்மூன்று நாட்களாக வீட்டின் கதவு திறக்காமல் இருந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பெயரில், வந்து சோதித்த போலீசாருக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
கோவை ஆவாரம் பாளையம், ஸ்ரீ வள்ளி நகரைச் சேர்ந்தவர் சிபி சுப்பிரமணியம். 43 வயதாகும் இவர், இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.
மேலும், சிபியின் தாயான வசந்தாவுக்கு 63 வயதாகும் நிலையில், அவருக்கு மனநலம் பாதிப்புடன் நடக்க முடியாமல் இருந்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே போல இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தான், கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக சிபி சுப்ரமணியத்தின் வீட்டின் கதவு திறக்காமல் இருந்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அது மட்டுமில்லாமல், சிபியின் வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசி வருவதாகவும், அக்கம் பக்கத்தினர் அந்த வீட்டின் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அப்போது, சிபி வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. தொடர்ந்து, ஜன்னல் வழியாக போலீசார் வீட்டிற்குள் பார்த்த போது, கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. தூக்கில் தொங்கிய படி, சிபி சுப்பிரமணியம் இறந்து கிடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதன் பின்னர், கதவை உடைத்து உள்ளே நுழைந்த போலீஸ், அழுகிய நிலையில் இருந்த சிபியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் அழுகிய நிலையில் இருந்ததால், அவர் இறந்து மூன்று நாட்கள் வரை இருக்கும் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். அதே போல, சிபி பராமரித்து வந்த அவரது தாயார் வசந்தா, வேறொரு அறையில் மயக்க நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், மகன் இறந்தது கூட தெரியாமல் அவர் வீட்டில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மகன் இறந்ததால், சுமார் மூன்று நாட்களாக தண்ணீர் மற்றும் உணவை அருந்தாமல் வசந்தா மயங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிபி சுப்ரமணியத்தின் மறைவுக்கான காரணம் குறித்து, போலீசார் தொடர்ந்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். மகன் இறந்தது தெரியாமல், தாய் மூன்று நாட்களாக ஒரே வீட்டில் இருந்த சம்பவம், அப்பகுதியில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.